அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒரு வாரத்தில் பாராட்டு விழா: ஸ்டாலின்

வெளிநாடு சுற்றுலாப் பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில்
அதிமுக ஆட்சியில் பெற்ற முதலீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒரு வாரத்தில் பாராட்டு விழா: ஸ்டாலின்


வெளிநாடு சுற்றுலாப் பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார்!

தமிழகம் முதலீட்டுக்குத் தக்க இடம் என்றிருந்ததால், தானாக வந்த முதலீடுகளால், இன்றைக்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் தொழிற்சாலைகள் அணி வகுத்து நிற்கின்றன.

தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் பொறுப்பிலிருந்த தலைவர் கருணாநிதி, தொழிற்துறை அமைச்சராக என் நிர்வாகத்திலும், வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல், ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தல், உள்ளிட்ட கமிஷன் இல்லாத அனுமதிகள் மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகின. 

மாநிலமே இந்திய நாட்டில் வளர்ச்சியின் நட்சத்திரமாக விளங்கியது. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக தி.மு.க. ஆட்சியில்தான் விளங்கியது.

2015ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காணவில்லை; கானல் நீராகிப் போனது! 2019ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை; காற்றில் கறைந்து விட்டதோ? தமிழகத்தில் தொழில் துவங்க வந்த முதலீட்டாளர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் சென்றார்கள் என்ற விவரமும் வெளியாகவில்லை.

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்று சட்டமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கைக் கூட வைக்கவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு - செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடத் தயாரா?

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com