சிறப்புக் கட்டுரை: நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்திற்கு இதுதான் காரணமா? சுதந்திரத்தை இழக்கிறதா நீதித்துறை? 

விஜய தஹில் ரமணி இடமாற்றம் செய்யப்பட்டது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் வெளியாகியுள்ளன. என்ன காரணமாக இருக்கும்..? 
சிறப்புக் கட்டுரை: நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்திற்கு இதுதான் காரணமா? சுதந்திரத்தை இழக்கிறதா நீதித்துறை? 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜய தஹில் ரமணி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை என்று உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பார்க்கலாம்..

விஜய தஹில் ரமணி 1982ம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த பின்னர், மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றத்தில் அரசு பிளீடர் மற்றும் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், கடந்த  2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று ஒரு வருடம் ஆன நிலையில், அவரை மேகாலயா உயர்நீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்து கொலிஜியம் அறிவிப்பு வெளியிட்டது. அதேபோன்று, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டது. 

தஹில் ரமணியின் கோரிக்கை நிராகரிப்பு:

கொலிஜியம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி கோரிக்கை விடுத்தார். காரணம், 75 நீதிபதிகளைக் கொண்டதும், 32 மாவட்ட நீதிமன்றங்களைக் கொண்டதுமான சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக தஹில் ரமணி பதவி வகிக்கிறார்.  தற்போது அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ள மேகாலயா உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 3 நீதிபதிகள். அதிலும் ஒரு நீதிபதி இடம் காலியாக உள்ளது. 7 மாவட்ட துணை நீதிமன்றங்களைக் கொண்டது. ஆனால், இறுதியில் தஹில் ரமணியின் கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஜெயந்த் படேல், அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது தனது பதவியை ராஜினாமா செய்தார். நாட்டையே உலுக்கிய இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட குஜராத் உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதி ஜெயந்த் படேலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தஹில் ரமணி ராஜினாமா:

கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஹில் ரமணியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள வழக்கறிஞர்களும் தஹில் ரமணிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிகமான நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றத்தில் இருந்து, மிகவும் குறைவான நீதிபதிகளைக் கொண்ட சிறிய நீதிமன்றத்திற்கு நீதிபதியை மாற்றுவது என்பது தரக்குறைவான செயலாகவே கருதப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில், நீதித்துறை அதிகாரிகளை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் என்று கொலிஜியம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அப்படியென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது நிர்வாகம் சரியில்லையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. 

தஹில் ரமணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்னவென்று பார்த்தால், கடந்த 2002ம் ஆண்டு குஜராத் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. 

'பில்கிஸ் பானோ' பாலியல் வன்கொடுமை வழக்கு:

கடந்த 2002ம் ஆண்டு மும்பையில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. அப்போது, அகமதாபாத்தில் ராந்திக் என்ற கிராமத்தில் பில்கிஸ் பானோ என்ற பெண்ணின் குடும்பத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர். 5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மேலும், 6 பேர் காயங்களுடன் தப்பினர். 

இந்த வழக்கில் 11 பேருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, கடந்த 2008ல் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய 5 போலீசார் மற்றும் 2 அரசு மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த சமயத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன. 

பின்னர், இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், விடுவிக்கப்பட்ட 7 அரசு அதிகாரிகளையும் குற்றவாளிகள் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பில் முக்கிய பங்காற்றியவர் தஹில் ரமணி ஆவார்.

மும்பை உயர்நீதிமன்றம் அளித்த  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவையும் பிற்காலத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் போது குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி இருந்தது அனைவரும் அறிந்ததே. 

கொலிஜியத்தின் முடிவு வெட்கக்கேடானது!

தஹில் ரமணி இடமாற்றம் குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், 'நாட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான தஹில் ரமணியை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் முடிவு வெட்கக்கேடானது. அவர் பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புக்கு பழிவாங்கும் விதமாகவே மிகவும் சிறிய நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ரமணி இதனை ஏற்காமல் பதவியை ராஜினாமா செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், மூத்த நீதிபதிக்கான அங்கீகாரத்தை அளித்து கொலிஜியம் சரியான முடிவை எடுத்து நீதித்துறையின் மேல் உள்ள மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் முதல் மூத்த நீதிபதியாக இருப்பவர் தஹில் ரமணி. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற இருக்கும் சூழ்நிலையில் அவரை பழிவாங்கும் நோக்கிலே கொலிஜியம் இந்த முடிவு எடுத்துள்ளது என்று  பல மூத்த வழக்கறிஞர்கள் தஹில் ரமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். நீதித்துறைகளின் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது என்றும் கண்டனக் குரல்களும் வலுத்து வருகின்றன.

தஹில் ரமணியின் இடமாற்றம் குறித்து கொலிஜியம் விளக்கம் அளிக்குமா?  நீதி தேவதைக்கே(நீதித்துறை) இந்த நிலைமை என்றால் மக்களுக்கு..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com