டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் 385 சிறப்புக் குழுக்கள் அமைப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் 385 சிறப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது. இது தவிர, 42 விரைவு நடவடிக்கைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தமிழகம் முழுவதும் 385 சிறப்புக் குழுக்கள் அமைப்பு


டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் 385 சிறப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது. இது தவிர, 42 விரைவு நடவடிக்கைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் அக்குழுக்கள் நேரடியாகச் சென்று நிலைமையை கண்காணித்து வருவதாகவும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சாலையோரங்களில் பயனற்று கிடக்கும் காலி டப்பாக்கள், டயர்கள், தேங்காய் மூடிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏடிஸ் - எஜிப்டை வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை  9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 1,800-க்கும் அதிகமானோர் 
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத் தவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை என பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கிய நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறப்புக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் மருத்துவ அலுவலர், சுகாதார அலுவலர் மற்றும் தலா 20 ஊழியர்கள் உள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று சிறப்பு முகாம்களையும், கொசு ஒழிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய அளவிலான மருந்துகளும், மாத்திரைகளும் மாவட்ட மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com