வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு

 பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, தனது தலைமையிலான அமர்வுகள் எதிலும் திங்கள்கிழமை


 பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, தனது தலைமையிலான அமர்வுகள் எதிலும் திங்கள்கிழமை பங்கேற்கவில்லை. இதனிடையே, அவரது இல்லத்தில் அவரை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென சந்தித்துப் பேசினார். 
இடமாற்ற உத்தரவைத் திரும்ப பெறக்கோரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் சார்பில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹிலராமாணீ. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில்  தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்தது.
மேலும் சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை பரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ராஜிநாமா கடிதம்: இந்த  உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், அந்த கடிதத்தின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தார். 
தலைமை நீதிபதி அமர்வு: சென்னை உயர்நீதிமன்றப் பதிவுத்துறை திங்கள்கிழமைக்கான (செப்.9) அன்றாட வழக்குகள் விசாரணைப் பட்டியலை வெளியிட்டது. அதில் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ மற்றும் நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு 75 வழக்குகளை விசாரிக்கும் என பட்டியலிட்டிருந்தது.  
இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதன் காரணமாக அவரது தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் இரண்டாவது அமர்வான நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டன. 
சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு: இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து பேசினார்.
நீதிமன்றப் புறக்கணிப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர் சங்கத்தின் (எம்ஹெச்ஏ) அவசரப் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை நீதிபதி இடமாற்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரி,செவ்வாய்க்கிழமையன்று (செப்.10) சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குரைஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், இந்த போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிற நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதே போன்று மெட்ராஸ் பார் அசோசியேசனும் (எம்பிஏ) நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.   
 கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 10-ஆவது ஆண்டாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன் பின்னர் தலைமை நீதிபதி இடமாற்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com