சுடச்சுட

    

    ஜாதிமத பேதங்களைக் களைவோம்: முதல்வர்  தலைவர்கள் ஓணம் வாழ்த்து

    By DIN  |   Published on : 11th September 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps


     ஓணம் பண்டிகையை ஒட்டி, தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து,

    முதல்வர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
    மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து அந்தச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்க, அதற்கு மகாபலி சம்மதம் தெரிவிக்கிறார்.
    முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்திலும், மூன்றாம் அடியை மகாபலி சர்க்கரவர்த்தியின் தலையிலும் வைத்து பாதாள உலகத்துக்கு தள்ளினார் திருமால். பாதாள உலகத்துக்குச் செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களைக் காண வேண்டும் என்ற மகாபலியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார். 

    அதன்படி, மகாபலி சக்கவர்த்தி மக்களைக் காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.
    ஓணம் பண்டிகையின் பத்து நாள்களும், மக்கள் தங்களது இல்லங்களின் வாயில்களில் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புதிய ஆடைகளை உடுத்தி, குடும்பத்தினருடன் ஓணம் விருந்துண்டு, ஆடல், பாடல், விளையாட்டு என்று மனமகிழ்வோடு மலையாள மக்கள் இந்தப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.
    இந்த இனிய நாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் ஜாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும்.

    தலைவர்கள் வாழ்த்து 
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட ஓணம் வாழ்த்துச் செய்தி:
    திருவோணம் பண்டிகையின்போது மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் பத்து நாள்களுக்கும் அரிசி மாவினால் அழகிய கோலமிடுவர். 
    அந்தக் கோலத்தை வண்ணப் பூக்களால் அலங்கரித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவர். 
    இந்தப் பண்டிகையின்போது ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைப்பர்.
    இந்தத் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்ற உயரிய கருத்தை அனைவரும் அறியும் வகையில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளனர். 

    மு.க.ஸ்டாலின் (திமுக): உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். அறுவடைத் திருநாளான ஓணம் திருநாள் கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. ஜாதி, மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும்  விழா இது.

    கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழி பேசும் கேரள மாநில மக்கள், தமிழக மக்களோடு சகோதர உணர்வுடன் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்தும், தொழில் புரிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகள்.

    ராமதாஸ் (பாமக): புவி வெப்பமயமாதல் கேரளத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
     ஓணம் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும்.

    ஜி.கே.வாசன் (தமாகா): கேரள மக்கள் ஜாதி, மத பேதங்களைக் கடந்து மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் திருநாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. மகாபலி மன்னர்போல தொண்டுள்ளதுடன் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துகள்.

    அன்புமணி: மகாபலி மன்னன் காலத்தில் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருந்தார்களோ, அதேபோல் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவே ஓணம் திருவிழா இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாளும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai