Enable Javscript for better performance
தினமணி 86: வாழ்த்தும் தலைவர்கள்- Dinamani

சுடச்சுட

  

  தினமணி 86: வாழ்த்தும் தலைவர்கள்

  By DIN  |   Published on : 11th September 2019 05:07 AM  |   அ+அ அ-   |    |  

  eps_vs_mks


  தினமணி நாளிதழ் 11.9.1934 அன்று தொடங்கப்பட்டு, தற்போது 85 ஆண்டுகளை நிறைவு செய்து 86-ஆவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைப்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
  உலக நிகழ்வுகளை நடுநிலையோடு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைகளின் தலையாய கடமையாகும். அவ்வழியில் தினமணி நாளிதழ் நிகழ்வுகளைப் பகுத்தாய்ந்து நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்கள் பயன்பெறும் வகையில் செய்திகளை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில்  தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக தினமணி நாளிதழ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது எனக்கு மிகுந்த மனநிறைவையும்,  மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த இனிய வேளையில் தமிழ்நாடு முழுவதும் வெளிவரும் தினமணி நாளிதழ் அனைவரும் பயன்பெறும் வகையில் இன்னும் சிறப்புடன் பல நூறு ஆண்டுகள் வெளிவரவும், அதன் வாசகர் வட்டம் தொடர்ந்து விரிந்து படரவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  எடப்பாடி கே.பழனிசாமி
  தமிழக முதல்வர்

   

  இதழியல் பணியில் 85 ஆண்டுகளை இனிதே  நிறைவு செய்து - மகாகவி பாரதியாரின் நினைவு தினமான 11.9.2019 அன்று 86-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமணி நாளிதழுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  1934 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் தேசிய நாளிதழ் ஒன்றிற்கு சிறந்த பெயர் சொல்லும் வாசகருக்கு பத்து ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டு - அந்த விளம்பரம் மூலம் இரு வாசகர்களிடமிருந்து கிடைத்த பெயர்தான் தினமணி. ஆகவே, ஒரு பத்திரிகையை - அதுவும் தமிழ் மொழியிலான பத்திரிகையை மக்கள் இயக்கமாக ஆரம்பித்துள்ளதை எண்ணிப் பெருமையடைகிறேன்.
  முதன்முதலில் தினமணி வெளிவரப்போகிறது என்ற அறிவிப்பு தாங்கிய முழுப்பக்க விளம்பரத்தில், தினமணி பத்திரிகை எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல. இது  மக்களுக்கான பத்திரிகை என்று இடம்பெற்றிருந்த முழக்கம் நினைவுகூரத்தக்கது. இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தங்குதடையில்லா ஆதரவு, தமிழ் மக்கள் மனதில் அடிமை உணர்வுகளை அறவே அகற்றுவது, நாட்டில் ஏழை - பணக்காரர் என்று இருக்கும் பாகுபாட்டை நீக்குவது ஆகிய இந்த மூன்றும்தான் தினமணி தனது முதல் தலையங்கத்தில் எடுத்து வைத்த முத்தான நோக்கங்கள்.
   தமிழர்கள் என்றால் - அந்த வார்த்தை இந்துக்களை மட்டும் குறிப்பதல்ல. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மற்றவர்கள் என்று யார் தமிழ்ப் பேசினாலும் அவர்கள் எல்லாம் தமிழர்களே என்று தினமணி தனது தலையங்கத்தில் அளித்திருந்த விளக்கத்தைத் திரும்பிப் பார்த்தால், இந்தப் பத்திரிகை தமிழர்களுக்காக - தமிழ்நாட்டுக்காக - இந்த நாட்டுக்காக எத்தகைய அரிய பணிகளை மறைந்த  ராம்நாத் கோயங்கா அவர்கள் தலைமையில் ஆற்றியது என்பதை உணர முடிகிறது.


  கருத்து சுதந்திரத்தின் நிலைக்கண்ணாடியாக தினமணி நெருக்கடி நிலைமை காலத்திலும் பங்காற்றியதையும் - அதன் நிறுவனராக இருந்த  ராம்நாத் கோயங்கா அவர்கள் விடுதலைப் போராட்ட வீரராக - அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராக - பத்திரிகை சுதந்திரத்தின் துணிச்சல் மிக்க பாதுகாவலராக நின்ற பசுமையான நினைவுகளையும் என் போன்ற தினமணி வாசகர்களின் மனதினை விட்டு என்றும் நீங்காது.
  தினமணி நாளிதழ் இன்றைய உரிமையாளரான மனோஜ் குமார் சொந்தாலியா அவர்கள்  தலைமையிலும், ஆசிரியர் கி.வைத்தியநாதன் மற்றும் ஆசிரியர் குழு, பத்திரிகை நிருபர்கள் அனைவரது திறமையிலும் மென்மேலும் வெற்றிநடை போட வேண்டும் என்றும், பல்லாண்டு - பல நூறாண்டுகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணைக் காப்பாற்ற தினமணி கம்பீரமாக நின்று - தமிழுக்கும், அன்னைத் தமிழகத்துக்கும், இந்திய திருநாட்டுக்கும் அருந்தொண்டாற்றிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
  மு.க.ஸ்டாலின்
  எதிர்க்கட்சித் தலைவ
  ர்

   

  மகாகவி பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதியன்று தினமணி நாளிதழ், அகவை 86-இல் அடியெடுத்து வைக்கின்றது என்பதையும், அதனையொட்டி தினமணி 85 என்கிற சிறப்பு மலர் வெளியிடப்பட இருக்கின்றது என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
  மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில், ஜனநாயக முறையில் பெயர் சூட்டப்பட்ட நாளிதழ் தினமணி.
  இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவினை வழங்கியதோடு, ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத் தாழ்வினைப் போக்குவதை தனது லட்சியமாகக் கொண்டு துவக்கப்பட்ட நாளிதழ் தினமணி என்றால், மாறுபட்ட கருத்து இராது. மகாகவி பாரதியாரின் லட்சியங்களை தனதாக்கி, ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் பொதுப் பணியாற்றி, அரசியலுக்கும் இலக்கியத்துக்கும் தனது கணிசமான பங்கினை வழங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகை தினமணி. தனித்துவமான நடையோடு செய்திகளை வெளியிட்டு, தமிழர்களின் உணர்வோடு ஒன்று கலந்த பத்திரிகை தினமணி. மேதாவிகள் மட்டுமல்லாமல், பாமரனும் படித்துப் பரவசம் கொள்ளும் வகையில், எளிய நடையில் உண்மைச் செய்திகளை வெளியிடுவதிலும், மக்களின் அன்றாடப் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றைத் தீர்த்து வைப்பதிலும் ஆங்காங்கே காணும் கொடுமைகளை துணிச்சலோடு எடுத்து வைத்து, அவற்றைக் களைவதிலும் முக்கியப் பங்காற்றி வரும் நாளிதழ் தினமணி.


  நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் ஆகியவற்றினை லட்சியமாகக் கொண்டு, இந்திய நாட்டின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண்பாட்டையும், தமிழர்களின் தனித்துவத்தையும் காப்பாற்றுவதற்காகவும், தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தினமணி நாளிதழின் சமுதாயப் பணியினை மனதாரப் பாராட்டுவதோடு, இந்த நாளிதழின் பணி பல நூறாண்டுகள் கடந்து பீடுநடை போட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
  ப. தனபால்
  பேரவைத் தலைவர்

   

  தமிழகத்தில் வெளியாகும் முன்னணித் தமிழ் நாளிதழான தினமணி, தனது இதழியல் பணியைத் தொடங்கி, வெற்றிகரமாக 85 ஆண்டுகள் நிறைவு செய்து பெருமை பொங்க, 86-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்துமிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
  அறிவார்ந்த மனிதர்கள், தாங்கள் உண்டு, தங்கள் பிழைப்பு உண்டு என்று எண்ணாமல், ஊர் நடப்பு, உலக நடப்பு இவற்றை அறிந்து அதனுடன் இணைந்து பயணித்து, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவே பெரிதும் விழைகிறார்கள். நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களது அறிவுத் தாகத்துக்கு ஈடு கொடுத்திட நாளிதழ்கள் எனும் செய்தித் தாள்கள் உருவாகின. 
  உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்திடாமல், உண்மைத் தன்மை சிறிதும் மாறாமல், செய்தியை செய்தியாகவே அளித்தல், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முற்றிலுமாகத் தவிர்த்தல், எவ்வித சார்பும் இன்றி, நடுநிலையோடு செய்திகளைத் தருதல், பத்திரிகை தர்மத்தைக் காத்தல் ஆகிய நன்னெறிகளைத் தன்னகத்தே கொண்டிருப்பது ஒரு நல்ல நாளிதழுக்கு இலக்கணமாகும்.
  இந்த நன்னெறிகள் அணுவளவும் பிசகிவிடாமல், தனது நேர் கொண்ட பார்வையில் எந்தச் சமாதானமும் செய்து கொள்ளாமல், நாட்டுக்கு எது தேவை என்று உணர்ந்து வளைதலோ, நெளிதலோ சிறிதும் இன்றி உண்மைச் செய்திகளை தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் கொண்டு சேர்த்திடும் உயரிய செய்தித் தாளாக தினமணி நாளிதழ் விளங்குகிறது.
  தினமணி நாளிதழின் இந்தப் பெருமைமிகு மரபையும், அதன் பாரம்பரிய தனிச் சிறப்பையும், தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் முதல் தற்போதைய ஆசிரியரான கி. வைத்தியநாதன் வரையிலும், கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்து வருவது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்.
   1934-ஆம் ஆண்டில் அரை அணா விலையில் எட்டுப் பக்கங்களுடன் வெளியான தினமணி, காலத்தின் இன்றைய தேவைக்கேற்ப ஒவ்வொரு நாளும் சிந்தனையைச் செழுமைப்படுத்தும் நடுப்பக்க கட்டுரைகள், அறிவைத் தூண்டும் தலையங்கம் மற்றும் சிறப்புச் செய்திப் பத்திகள் ஆகியவை தாங்கிய முதன்மைச் செய்தித் தாளுடன் இளைஞர் மணி, மகளிர் மணி, வெள்ளிமணி, சிறுவர்மணி, தமிழ்மணி, தினமணி கதிர் என பலதரப்பட்ட வாசகர்களுக்கான சிறப்பு இணைப்புகளுடன் தனிக் கட்டுரைப் பகுதிகளுடனும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
  நாட்டு மக்களிடம் நாள்தோறும் நல்ல செய்திகளைக் கொண்டு சேர்த்திடும் தினமணி நாளிதழ், மாண்புமிகு அம்மா அவர்கள் பெரிதும் விரும்பி படித்த பத்திரிகைகளுள் முதன்மையானதாக இருந்தது.


  தினமணி, இதழியல் பணியில் 85 ஆண்டுகள் நிறைவு செய்து அகவை 86-இல் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், பழைமையின் பெருமை மாறாமல், புதுமையில் இனிமை குன்றாமல் தரமான செய்திகளோடு கண்கவர் வடிவமைப்புடன் உருவாக்கி தந்து கொண்டிருக்கும் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்களுக்கும், இதனை வெளியிடும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவன குழுமத்துக்கும் மற்றும் அரசியல், வணிகம், விளையாட்டு முதலான பல்வேறு பிரிவுகளில் செய்தி ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தி சேகரித்து தரும் செய்தியாளர்கள், பிழை திருத்துவோர் வரையிலான செய்திப் பிரிவு பணியாளர்கள், பத்திரிகை உரிய நேரத்தில் வெளியாகிட தங்கள் உழைப்பை நல்கிடும் உழைக்கும் பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
  தமிழக பத்திரிகை உலகில் தனித்தோர் சிறப்பிடம் பெற்று தலைநிமிர்ந்து நிற்கும் தினமணி நாளிதழின் பயணம், இன்னும் நூறு ஆண்டுகளையும் தாண்டும் வெற்றிப் பயணமாகத் தொடர்ந்து, சாதனை படைக்கட்டும் என உளமாற வாழ்த்துகிறேன்.
  ஓ. பன்னீர்செல்வம்
  துணை முதல்வர்

   

  உண்மையை மட்டும் எழுதும் கெளரவமான என்னுடைய அபிமான நாளிதழான தினமணி பத்திரிகையின் 86-ஆவது ஆண்டு விழாவான இந்நாளில் பத்திரிகையின் ஆசிரியர் கி.வைத்தியநாதன் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
  உங்கள் பணி பல்லாண்டு தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
  ரஜினிகாந்த்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai