சுடச்சுட

    
    moharam

     பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு மொஹரம் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்.


    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் உள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்துக்கள் பூக்குழியில்  இறங்கி வழிபட்டனர்.
     இவ்விழா, கடந்த 1 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பாத்திமா நாச்சியார் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குழி இறங்குதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு முதுவன்திடல் கிராமத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்துக்களின் வழிபாட்டு மரபு அடிப்படையில் காப்புக் கட்டி உடலில் சந்தனம், மாலை அணிந்து பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, 9க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் ஈரப்பதத்துடன் உள்ள துணியைப் போர்த்திக் கொண்டு நெருப்பை தலையில் அள்ளிக் கொட்டி நெருப்பு மெழுகுதல் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பாத்திமா நாச்சியார் சப்பரம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் பள்ளிவாசலில் இறக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில், முதுவன்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். 
     பூக்குழி இறங்கிய பக்தர்கள் கூறியது : சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் முதுவன்திடல் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலான இஸ்லாமியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து, தற்போது அங்கு வசித்து வருகின்றனர். முதுவன்திடலில் அவர்கள் வசித்த போது, மொஹரம் பண்டிகை உள்ளிட்ட இஸ்லாமிய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அவர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற பின்னர் அவ்விழாக்களை எங்களது முன்னோர்கள் பின்பற்றி கொண்டாடினர். எங்களின் முன்னோர்களின் வழியைப் பின்பற்றி தற்போது மொஹரம் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். இவ்விழாவில், உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்கவும், பிணிகள் அகலவும், திருமணத் தடைகள் நீங்கவும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் 10 நாள்களுக்கு முன் காப்புக் கட்டி விரதமிருந்து மொஹரம் பண்டிகை தினத்தன்று பூக்குழியில்(அக்னி) இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகிறோம். இதேபோன்று பெண்களும் மேற்கண்ட வேண்டுதலை அடிப்படையாகக் கொண்டு பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு அமர்ந்து தலையில் ஈரத்துணி போர்த்திக் கொண்டு தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவர். இதற்கு தலை மெழுகுதல் வழிபாடு எனக் கூறப்படுகிறது. இவ்விழா, இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, குலதெய்வ வழிபாட்டின் அடிப்படையில் எங்கள் பகுதியில் நடைபெறும் வேளாண் பணிகளில் அறுவடையான நெல், மிளகாய் உள்ளிட்ட வேளாண் பொருள்களை முதலில் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கையாக வழங்கி வருகிறோம் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai