புத்த கயை குண்டுவெடிப்பு: பயங்கரவாதியின் கூட்டாளி சென்னையில் கைது

புத்த கயை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதியின் கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.
புத்த கயை குண்டுவெடிப்பு: பயங்கரவாதியின் கூட்டாளி சென்னையில் கைது


புத்த கயை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதியின் கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிகார் மாநிலத் தலைநகரான பாட்னா அருகே புத்த கயையில் மகாபோதி ஆலயம் உள்ளது. இது, பௌத்தர்களுக்கு புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்துக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் நாடுகள் மட்டுமன்றி, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி புத்த கயையில் 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் புத்த மதத் துறவிகள் 7 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி  20ஆம் தேதி திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா புத்த கயைக்குச் சென்றார். அவர் புத்த கயைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, அங்கு இரு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தது. இதில், ஈடுபட்டது வங்கதேச நாட்டில் செயல்படும் ஜமாத் உல்முஜாகிதீன் ஆஃப் பங்களாதேஷ் (ஜெ.எம்.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்தது.
12 பேர் கைது: இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து, அந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தலாய்லாமாவை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஜெ.எம்.பி. அமைப்பைச் சேர்ந்த ஜீன்னத், கவுர் உள்பட மொத்தம் 12 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இஜாஸ் அகமது என்பவரை மேற்கு வங்க மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், ஆந்திர போலீஸாரும் இணைந்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சென்னையில் அவரது கூட்டாளி ஒருவர் பதுங்கியிருந்து வேலை செய்து வருவது தெரியவந்தது.
சென்னையில் சிக்கினார்: மேற்கு வங்க மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மசூர் அகமது, நவீன் மாலிக், மத்திய உளவுத் துறை டி.எஸ்.பி.க்கள் நந்தகுமார், சங்கர் ஆகியோர் தமிழக காவல்துறையின் மத இயக்கங்களை கண்காணிக்கும் உளவுப் பிரிவுடன் இணைந்து சென்னையில் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், துரைப்பாக்கம் அறிஞர் அண்ணாநகர் முதல் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வசிப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
 அதன் அடிப்படையில் அந்த வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவில் போலீஸார் திடீர் சோதனை செய்தனர். இதில் அந்த வீட்டில் இருந்த மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே உள்ள நித்தியானந்தபூர் பகுதியைச் சேர்ந்த இ.அசத்துல்லா ஷேக் என்ற ராஜா (35) என்பதும், அவருக்கும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஜெ.எம்.பி. அமைப்பைச் சேர்ந்த ஜீன்னத், கவுர் ஆகியோருக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ராஜாவை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். காலை தொடங்கி மாலை வரை விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
கட்டடத் தொழிலாளி: கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ராஜா சென்னையில் தங்கியிருந்து கட்டடத் தொழிலாளியாக, தனது நண்பர் ஒருவருடன் வேலை செய்து வந்துள்ளார். சென்னைக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டதால், அவர் தமிழிலும் நன்றாக பேசியது விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரிடம், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஜீன்னத், கவுர் ஆகியோரின் தீவிரவாதச் செயல்களுக்கு என்ன உதவி செய்தார் என விசாரணை செய்தனர். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கொல்கத்தா அழைத்து செல்வதற்காக டிரான்ஸிட் வாரண்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜாவை, செப்டம்பர் 13ஆம் தேதி கொல்கத்தாவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி  உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அவர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேவேளையில் ராஜாவை சென்னைக்கு அழைத்து வந்தது யார், இங்கு யார் அடைக்கலம் கொடுத்தது என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லஷ்கர்இதொய்பாவுடன் தொடர்பு: வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் உல்முஜாகிதீன் ஆஃப் பங்களாதேஷ் பயங்கரவாத அமைப்பு காஷ்மீரில் இந்திய ராணுவ நிலைகள் மீது, வெடிகுண்டு சம்பங்களிலும் ஈடுபடும் லஷ்கர்இதொய்பா அமைப்பின் ஆதரவுடன் செயல்படுவது தெரியவந்துள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.  இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில்,ஜமாத்உல்முஜாகிதீன் பங்களாதேஷ் என்ற அந்த நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.  
இதன் பின்னர் இந்த அமைப்பு காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றத் தொடங்கியது.
 மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, புத்த கயாவிலும் வெடிகுண்டு வைத்து, தலாய்லாமாவை தாக்க முயற்சித்தனர் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது. இந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
செல்லிடப்பேசியால் சிக்கிய ராஜா    
சென்னையில் கைது செய்யப்பட்ட ஷேக் அசத்துல்லா என்ற ராஜா, பயங்கரவாதிகளை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டதன் மூலம் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த ராஜா, தனது சொந்த ஊருக்குச் சென்று வரும்போதும், சென்னைக்கு வரும் முன்னரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பின் காரணமாக ஜீன்னத், கவுர் ஆகியோருடன் ராஜா நெருக்கமான தொடர்பில்  இருந்துள்ளார். இதன் விளைவாக அண்மையில் தனது சொந்த ஊருக்குச் சென்ற ராஜா, தனது செல்லிடப்பேசி மூலம் ஜீன்னத், கவுர் ஆகியோரை  தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார்.
மேலும் ஜீன்னத், கவுர் ஆகியோருடன் நெருக்கமாக தீவிரவாத தொடர்பில் இருக்கும் சில நபர்களிடமும் ராஜா செல்லிடப்பேசி மூலம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலமாகவே ராஜா குறித்து தீவிரமாக விசாரணை செய்து வந்த போலீஸார், தற்போது  அவரை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com