ரிசர்வ் வங்கி உபரிநிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டம்

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வங்கிகள் மூலம் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ரிசர்வ் வங்கி உபரிநிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டம்


ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வங்கிகள் மூலம் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். 
தேனியில்  செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்தியா வரலாறு காணாத நிதி  நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதை நீதி ஆயோக் தலைவர், துணைத் தலைவர், பொருளாதார நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் பொருளாதார நெருக்கடி அல்ல. மத்திய அரசின் கொள்கை முடிவுகளால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியாகும். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவதாகக் கூறிய பாஜக அரசு, தற்போது ரிசர்வ் வங்கியின் உபரிநிதி ரூ.1.76 லட்சம் கோடியை கைப்பற்றி அதன் மூலம் நிதி நிலைமையை சமாளிக்கத் திட்டமிட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு மூலம் நெருக்கடியை போக்கிவிட முடியும் என்று அரசு நினைக்கிறது. 
பாஜகவும், அதற்கு முந்தைய அரசுகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் தொகையில் ரூ.12 லட்சம் கோடி வாராக் கடனாக உள்ளது. வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக கடன் வழங்கி வருகிறது. கிராமங்களில் நுண்நிதி கடன் நிறுவனங்கள், கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு வணிகர்கள் மற்றும் சாமானியர்கள் வங்கிகளால் பயனடையவில்லை.
ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் நிதி, வங்கிகள் மூலம் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடுகளில் எந்த பயனும் இல்லாத நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக சுற்றுப்பயணம் சென்று திரும்பியுள்ளனர். வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டும் அரசு, மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகள், அரசு நூற்பாலைகள், சிறு குறு தொழிற் சாலைகளை திறப்பதில் ஏன் அக்கறை காட்டவில்லை.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைளை உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கினால், தொழில் துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றார். பேட்டியின்போது,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com