சுடச்சுட

  

  மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம்: 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு

  By DIN  |   Published on : 12th September 2019 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agri


  விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கும் மத்திய அரசு திட்டத்தில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் பேர் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை நடைபெறும் ஓய்வூதியத் திட்டத் தொடக்க விழாவில் தமிழக விவசாயி ஒருவரும் பங்கேற்கவுள்ளார்.
  சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும் போது, அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி, 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் மாதம்தோறும் பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். அதன்படி, 18 வயதுள்ள ஒரு விவசாயி ரூ.55-ஐ செலுத்த வேண்டும். 19 வயதில் இருந்து 40 வயதை அடையும் வரையில் ஆண்டுதோறும் மாதாந்திர பங்களிப்புத் தொகை உயரும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசும் அளிக்கும்.
   40 வயதை அடைந்த ஒரு விவசாயி மாதாந்திர பங்களிப்புத் தொகையாக ரூ.200 செலுத்துவார். அத்துடன் பங்களிப்புத் தொகை செலுத்துவது நின்று விடும். 
  அந்த விவசாயி 60 வயதை எட்டும் போது அவருக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியத் தொகை அளிக்கப்படும்.
  தமிழகத்தில் 37,904 பேர்: பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து இதுவரை 37 ஆயிரத்து 904 பேர் இணைந்துள்ளனர். 
  அவர்களில் 18 முதல் 25 வயதுள்ள 5,179 பேருக்கும், 26 முதல் 35 வயது வரையில் 11,777 பேருக்கும், 36 முதல் 40 வயது வரையில் 7,996 பேருக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இணைந்ததற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 10 ஆயிரத்து 979 பேர் பெண்கள். 13 ஆயிரத்து 973 பேர் ஆண்கள். மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கவும், புதிய விவசாயிகள் சேரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
  எந்தெந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 4,953 பேர் மத்திய அரசின் திட்டத்தில் இணைந்துள்ளனர். இதேபோன்று, விழுப்புரத்தில் 1,952 பேரும், திருநெல்வேலியில் 1,854 பேரும், விருதுநகரில் 1,703 பேரும், திருவண்ணாமலையில் 1,681 பேரும், திருச்சியில் 1,643 பேரும் அதிகபட்சமாக இணைந்துள்ளனர். 
  அவர்களுக்கு திட்டத்தில் இணைந்ததற்கான அடையாள அட்டைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறார். 
  அதன்பிறகு, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
  தஞ்சை விவசாயி ராஞ்சி பயணம்
  பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத் தொடக்க விழாவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி சத்தியநாராயணன் ராஞ்சி சென்றுள்ளார்.  பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளியாக உள்ள அவர் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கிறார். திட்டத்தில் உறுப்பினராக அவர் இணைந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையிலேயே அளிக்க இருப்பதாக தமிழக 
  அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai