தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 

சிறப்புக் கட்டுரை: முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தமிழக வளர்ச்சிக்கு உதவுமா? 

ஜெயலலிதாவே தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினாரே தவிர, இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டது..

கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த முதல்வரும் கையில் எடுக்காத ஒரு விஷயத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே தமிழகத்தில் தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினாரே தவிர, இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்றதில்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வெளிநாடு சென்றதனால், தமிழகத்திற்கு என்ன பலன்? அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது மாநில வளர்ச்சிக்காகவா? அல்லது தனிப்பட்ட விருப்பத்திற்காகவா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. 

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்:

கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். 13 நாட்கள் வெளிநாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள பல்வேறு தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டதோடு, அந்நாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைத்தார்.

மொத்தமாக ரூ.8,835 கோடி முதலீட்டுக்கு 41 நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் இந்தப் புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முக்கியமாக இங்கிலாந்து நாட்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளை நிறுவனத்தை தமிழகத்தில் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன. முதல்வர் தனது பயணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். 

சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், 'வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக ரூ.8,835 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 41 நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்தப் புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும்' என்று தெரிவித்தார். 

மேலும், ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன? எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? அவர் பேசுவது முழுவதும் பொய்யான செய்தி. கடந்த 5 ஆண்டு காலத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டால், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். தொழில் தொடங்க அதிகபட்சம் 5 ஆண்டு காலம் ஆகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2006 -11ம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 26,000 கோடி ரூபாய் முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளன. 

முதல்வரின் அடுத்த பயணம்:

நாம் பேசும் போது அமெரிக்காவில் அப்படி இருக்கிறது? துபாயில் இப்படி இருக்கிறது? என்றெல்லாம் பேசுகிறோம். வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் நாம் அதற்கான தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொண்டு நமது மாநிலத்தில் செயல்படுத்த முடியும். எனவே, எங்களது வெளிநாட்டுப்பயணங்கள் தொடரும்.

நீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்வதற்காக விரைவில் இஸ்ரேல் செல்ல இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காவே வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நாட்டைப் பற்றி கவலைப்படாத கட்சி தான் திமுக. மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்ட தலைவர் தான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்' என்று பேசினார். 

மேலும், 'நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த முறை முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு 4 மாதத்திற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க தொழிலதிபர்கள் தெரிவித்தனர். அதனால் தான் ஆந்திராவில் தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்டார். 

40 ஆண்டுகளாக வெளிநாட்டுப்பயணத்தை புறக்கணித்த முதல்வர்கள்

முன்னதாக, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது வெளிநாடு சென்றார். 1970ம் ஆண்டு கருணாநிதி, 1978ம் ஆண்டு எம்.ஜி.ஆர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டனர். அதன்பின்னர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தமிழகம், அதிக வளங்கள் நிறைந்த பகுதி மட்டுமின்றி திறன்மிகு மனித வளங்கள் கொண்ட மாநிலம். Human Development Index எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவிலே தமிழகம் 2வது இடம் பெற்றுள்ளது. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என்ற பெயரையும் தமிழகம் தொடர்ச்சியாக பெற்று வருகிறது. 

அந்நிய முதலீடு தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துமா?  

இந்த நிலையில், அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் கொண்டு வரப்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தொழில் நிறுவனம் தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படாத அளவுக்கு, சுற்றுசூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களைப் போலன்றி தமிழகத்தில் அனைத்து விதமான தொழில்துறை நிறுவனங்களும் இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் முதல்முறையாக BELL நிறுவனம் திருச்சியில் தொடங்கப்பட்டது, முன்னதாக இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தகுந்த இடம் கிடைக்காமல் இறுதியாக தமிழகத்தில் நிறுவப்பட்டது. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழகம் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்னும் சில ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகமாக தொடங்குவதன் மூலமாக, வேலைவாய்ப்பும் பெருகும். அந்த வகையில் முதல்வரின் இந்தப் பயணம் பெரும்பாலும் வரவேற்கத்தக்கதாவே உள்ளது. 

அதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டையும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது. 

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுகிறதா?

வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை அளிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கலாம். பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதே தொழில் நிறுவனர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இரண்டு  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் நிலை என்ன? அவற்றில் எவ்வளவு செயல்வடிவம் பெற்றுள்ளன? இவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில் நிறுவனங்கள் தொடக்கப்பட்டும் தமிழகத்தில் பெரும்பாலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது.  அது ஏன்? அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் நிலை என்ன? 

இயற்கை வளங்கள் பாதிக்கப்படுமா?

தொழில் நிறுவனங்கள் தொடங்க அடிப்படை ஆதாரம் தண்ணீர். கோடைக் காலத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தது அனைவரும் அறிந்ததே. எனவே, ஒருபக்கம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டாலும் மறுபக்கம் தமிழகத்தின் வளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 

தமிழக அரசு பதில் அளிக்குமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com