சுடச்சுட

  

  'ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்' : கருணாநிதி குறித்து நெகிழ்ந்த ஸ்டாலின் 

  By DIN  |   Published on : 12th September 2019 08:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin talks about his name

  சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் ஸ்டாலின்

   

  சென்னை: 'ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்' என்றார் என்று கருணாநிதி குறித்தும், தனது பெயர்க்காரணம் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

  இன்று (12-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்தவரும் 'பெரம்பூர் வாத்தியார்' என்று அழைக்கப்படும் இரா.அ.சிதம்பரம் அவர்களின் சகோதரர் திரு. கலைவாணன் அவர்களது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.

  இவ்வளவு சொல்கிறாயே நீ, ஸ்டாலின் என்ற பெயர் என்ன தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம். என் பெயர்க்காரணம் குறித்துதான் பாரதி அவர்கள் விளக்கிச் சொன்னார். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய -  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். காரணம், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கையின்மீது அளவுகடந்த பற்று உண்டு - பாசம் உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

  ஆனால், என்னுடைய பெயர் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த பெயர் வைத்த காரணத்தால் நான் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, இரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை முழித்து – முழித்து பார்ப்பார்கள்.

  ஏர்போட்டில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு!

  இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் கான்வெண்ட் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பெண்கள் மட்டும்தான் படிக்க முடியும். ஆண்கள் படிக்கமுடியாது. ஆனால், முன்பு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. அதுதான், தமிழ்நாட்டில் நம்பர் 1 கான்வென்ட் என்று சொல்வார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் எப்படியாவது என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் சேர்க்க வேண்டும் என்று நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் சென்றிருந்தார்கள். முரசொலி மாறன் அவர்கள் தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைப்பதற்கு ஒரு காப்பளராக [கார்டியனாக] இருந்தார்.

  அப்போது அண்ணா சாலையில் முரசொலி அலுவலகம் எதிரில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே, அங்கே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து 'அட்மிசன்' எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள். அப்படி, சேர்ந்தப் பிறகு முதன்முதலில் நான் பள்ளிக்கூடத்திற்குபோகும் போது, அந்தப் பள்ளியின் தாளாளர் [கரெஸ்பாண்டன்ட்] முரசொலி மாறன் அவர்களிடத்தில், "இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், இரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும். எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்", என்று சொல்லியிருக்கிறார்.

  உடனே தலைவர் கலைஞரிடத்தில் முரசொலி மாறன் அவர்கள் இதை சொன்னபோது, “நான் ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்” என்றார். இது வரலாறு!

  எனவே, இப்படி பெயரை வைப்பதில்கூட திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.

  இவ்வாறு அவர் நெகிழ்ந்து பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai