வீடுகளில் சூரிய ஒளி மின்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகளில் சூரிய ஒளி மின்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளில் சூரிய ஒளி மின்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகளில் சூரிய ஒளி மின்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட மரபுசாராத எரிசக்தி உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், சூரிய ஒளி மின்சார உற்பத்தி  குறித்த விழிப்புணர்வும், பயன்களும் தமிழ்நாட்டு மக்களை முழுமையாக சென்றடையாதது வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 21.2% அதாவது 74,082 மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி ஆகும். இதில் 11,758 மெகாவாட் அளவுக்கான மரபுசாரா மின்னுற்பத்திக்கான கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிக அளவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 01.01.2019 நிலவரப்படி 8359 மெகாவாட்  காற்றாலை மின்சாரம், 2,431 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்,  கரும்புச் சக்கையிலிருந்து 703 மெகாவாட் மின்சாரம், 265 மெகாவாட் பயோமாஸ் மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

சூரிய ஒளி மின்சார உற்பத்தியை மிகவும் தாமதமாக தொடங்கிய தமிழ்நாடு, அதில் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி 2023&ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இப்போதைய வேகம் போதாது. இந்தியாவில் இராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் மின்னுற்பத்திக்கான சூரிய ஒளி அதிகமாக கிடைக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நாம் தவறி விட்டோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு அதிக ஊக்கமளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திறந்தவெளிகளில் சூரியஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை உருவாக்குவது ஒருபுறமிருக்க, வீடுகளின் கூரைகள் மீதும் சூரியஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளி மேற்கூரை மூலதன ஊக்கத்தொகை திட்டம் ஆகியவற்றின் மூலம் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படுகிறது என்ற போதிலும் இது போதுமானதது அல்ல.  சென்னை மாநகரில் மட்டும் வீட்டுக்கூரைகள் மீது சூரிய ஒளி மின்தகடுகளை பொருத்துவதன் மூலம்  586 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், மேற்கண்ட இரு திட்டங்களின் மூலம் 30 மெகாவாட் மட்டுமே சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மிகவும் குறைவாகும்.

தமிழ்நாடு முழுவதும் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகளை அமைப்பதன் மூலம்  தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் சூரியஒளி மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான மின்கலன் கட்டமைப்புகள் தேவையில்லை. மாறாக, வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்தொகுப்பில் இணைப்பதன் மூலம் ஒவ்வொரு முறையும் நாம் பயன்படுத்திய மின்சாரத்திலிருந்து, நாம் உற்பத்தி செய்து மின்தொகுப்பிற்கு வழங்கிய மின்சாரத்தை  கழித்துக் கொண்டு மீதமுள்ள மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும்.

ஒரு வீட்டின் மேற்கூரையில் ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 யூனிட் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 1500 யூனிட் மின்சாரம்  உற்பத்தி செய்ய முடியும். சிறிய குடும்பங்களுக்கு இந்த மின்சாரமும், தமிழக அரசால் வழங்கப்படும்  100 யூனிட் இலவச மின்சாரமும் போதுமானதாகும். ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த ஒரு முறை ரூ.50,000 முதலீடு செய்வதன் மூலம்  பல ஆண்டுகளுக்கு மின்சார செலவை மிச்சப்படுத்த முடியும். குடியிருப்புகளில் அதிகபட்சமாக 10 கிலோவாட் சூரிய ஒளி மின்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதால் பெரிய குடும்பங்கள் கூட தங்களின் மின்சார செலவில் 90% வரை மிச்சப்படுத்த முடியும். ஆனால், இத்திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

வீடுகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அவசியமாகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு தலா ரூ.20,000 வீதம் மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதுதவிர மத்திய அரசின் சார்பில் 30% மானியம், அதாவது ரூ.15,000 வரை வழங்கப்பட்டது. இதன்மூலம் திட்டச்செலவில் 70% மானியமாக கிடைத்தது. ஆனால், தமிழக அரசின் மானியம் இப்போது நிறுத்தப்பட்டு விட்டதுடன், மத்திய அரசின் மானியத்தையும் பெற முடியவில்லை.

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் 03.09.2019 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி வீடுகளில் செயல்படுத்தப்படும் சூரிய ஒளி மின்திட்டங்களுக்கு முதல் 3 கிலோவாட்டுக்கு 40% வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரமும், அடுத்த 7 கிலோவாட்டுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.70 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவில் மாநில அரசும் மானியம் வழங்கினால் ஒரு கிலோவாட் அளவுக்கு சூரியஒளி மின்திட்டத்தை செயல்படுத்த செலவாகும் ரூ.50 ஆயிரத்தில் 80% அதாவது ரூ.40 ஆயிரம் மானியமாகவே கிடைக்கும். இது தமிழக மக்களை  சூரியஒளி மின்னுற்பத்தியை தேடி வருவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் சூரியஒளி மின்னுற்பத்தி அதிகரிப்பதுடன், கரியமில வாயு வெளியேறும் அளவு குறைந்து புவிவெப்பமயமாதலும் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, தமிழ்நாட்டில் வீடுகளின் கூரைகளில் சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு நிறுவப்படுவதை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் முதல்கட்டமாக வீட்டுக் கூரை சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.20000 வீதம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com