சுடச்சுட

  

  கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டி! குவியும் பாராட்டுகளும், ஆதரவுகளும்..

  By Muthumari  |   Published on : 12th September 2019 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamala

   

  85 வயதான மூதாட்டி தள்ளாத வயதிலும் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். அதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

  கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இட்லி வியாபாரம் தொடங்கிய முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கு இட்லி விற்று வந்தார், அதன்பின்னர் கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இனிமேல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

  சிறிய வீடு; விறகு அடுப்பு; மாவு அரைக்க ஆட்டுக்கல்; சட்னி அரைக்க அம்மிக்கல்; முறையாக செய்த மாசால் பொடியைக் கொண்டு சாம்பார். இப்படி ஒரு இயற்கையான உணவு என்பது தற்போதைய நவீன காலகட்டத்தில் அரிதான ஒன்றாகி விட்டது. ஆனால், இதனை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார் சமூக பணியாற்றும் கமலா பாட்டி. 

  மேலும், சாப்பிட வேண்டுமென்றால் வாழை இலையில் தான் பரிமாறுவார். பார்சல் வேண்டுமென்றால் பாத்திரம் எடுத்து வந்து தான் வாங்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அந்தப் பகுதியில் வேலைக்குச் செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் கமலா பாட்டியின் இட்லி என்றால் அவ்வளவு இஷ்டம். ஒருமுறை அவரது கடைக்கு வந்து சாப்பிட்டால் அவர்கள் வேறு கடைக்குச் செல்வதில்லை என்பதும் கூடுதல் தகவல். மேலும், பெரும்பாலும் அவர் கடைக்கு விடுமுறை அளிப்பதில்லை. அரிதிலும் அரிதாகவே கடைக்கு விடுமுறை இருக்கும். 

  காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இட்லி வியாபாரம் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் 5 கிமீ தூரத்தில் இருந்து அவரது கடைக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் பலர். அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களே ஏதேனும் உதவி செய்தால் அதனை மறுத்துவிடுவாராம். 

  தற்போது கமலா பாட்டி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் கோவை சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் பாட்டியின் கடைக்கு படையெடுத்துள்ளனர். சாதாரண மக்கள் பலரும் அவரது கடைக்கு நேரில் சென்று சாப்பிட்டு விட்டு அவரது அளப்பரிய பணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். முது வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் யாருமில்லை. 

  நேற்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கமலா பாட்டியின் ஒரு விடியோவை வெளியிட்டு, 'கமலாத்தாளின் கதையை கேட்டால் நாம் செய்யும் சாதனைகள் ஒன்றுமில்லை என்றாகி விடும். அவர் விறகு அடுப்பை உபயோகப்படுத்துவதை கவனித்தேன். அவரை யாருக்காவது தெரிந்தால் எனக்குத் தகவல் தெரிவியுங்கள். அவருடைய தொழிலுக்கு முதலீடு செய்ய நான் உதவுகிறேன். மேலும், அவருக்கு கேஸ் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்கிறேன்' என்று பதிவிட்டார். நேற்று முதல் கமலா பாட்டி குறித்த பதிவுகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவர் குறித்த பல நெகிழ்ச்சியான பதிவுகள் நம்மை கண்கலங்க வைக்கின்றன. 

  தகவலறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அவரது வீடு பழுதடைந்துள்ளதால், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் அவருக்கு புதிய வீடு கட்டித்தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ளும்படியும் கூறியுள்ளார்.

  நாம் எதிர்பார்ப்பில்லாமல் ஒரு சேவை செய்யும் போது, கண்டிப்பாக அதற்கான பாராட்டுகளும், பரிசுகளும் என்றாவது ஒருநாள் நம்மைத் தேடி வரும். இந்த மூதாட்டியே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. கமலா பாட்டியின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள் தெரிவிப்போம். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai