ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் உற்சாக கொண்டாட்டம்

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகையையொட்டி குழித்துறையில் புதன்கிழமை மகாபலி மன்னன் வேடமணிந்து ஊர்வலம் சென்ற இளைஞர்கள்.
ஓணம் பண்டிகையையொட்டி குழித்துறையில் புதன்கிழமை மகாபலி மன்னன் வேடமணிந்து ஊர்வலம் சென்ற இளைஞர்கள்.


கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவோணம் பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், ஓண சத்யா எனப்படும் அறுசுவை விருந்து உண்டும் உற்சாகமாக கொண்டாடினர். அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சி, அப்பளம், அடை பிரதமன் என்ற அடை பாயசம் உள்ளிட்ட உணவு வகைகள் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.     
இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள், சிறுவர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு வேஷமிட்டும்,  விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். கேரளத்தைப்போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, பளுகல், கொல்லங்கோடு, குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், திற்பரப்பு, பத்மநாபபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
குழித்துறை அஞ்சல் நிலைய சந்திப்பில் குழித்துறை நண்பர்கள் விளையாட்டு அமைப்பு சார்பில் இளைஞர்கள் மகாபலி மன்னன் போன்ற பல்வேறு வேடங்களில் பெருந்தெரு, இடைத்தெரு, கழுவன்திட்டை உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். இம்மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு 
ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
ஓணம் வரலாறு: கேரளத்தை ஆண்டு வந்த மகாபலி என்ற மாவேலி மன்னன் தர்மத்தில் சிறந்து விளங்கினார். அவரை சோதிக்க எண்ணிய மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து குள்ள உருவத்தில் வந்து மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலி மன்னரும் சம்மதித்தார்.  இதையடுத்து விஸ்வரூபமெடுத்த மகா விஷ்ணு முதல் அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடமில்லாததால் மகாபலி மன்னன் தனது தலையை காட்டினார். தனது நாட்டு மக்கள் மீது அன்பு வைத்திருந்த மகாபலி மன்னன் மக்கள் சந்தோஷமாக வாழ்வதை காண வருடத்தில் ஒரு முறை வருவதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த நாள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com