கல்குவாரிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

கல்குவாரிகள் அமைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கல்குவாரிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை


கல்குவாரிகள் அமைப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காற்று மாசடைவதைத் தடுக்கும் வகையில் கல்குவாரிகள் அமைப்பது தொடர்பாக கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி,  தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், புனித தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கல்குவாரிகளை அமைக்கக் கூடாது. 
மேலும், இரண்டு குவாரிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 1 கி.மீ. தொலைவு இடைவெளி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நிபந்தனைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த ஜூலை மாதம் நீக்கி உத்தரவிட்டது. எனவே,  மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிபந்தனைகளைத் தளர்த்தி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இடைக்காலத் தடை: இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல், தமிழக சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையின்பேரில் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. 
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்குவாரிகள் அமைப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com