கொள்ளிடத்தில் தடுப்பணை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொள்ளிடத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைக் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


கொள்ளிடத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைக் கட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கொள்ளிடத்தில் கடந்த ஆண்டு 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க்  கொண்டிருக்கிறது.
முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடியில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி அதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.
கொள்ளிடம் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்  தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித் துறையில் இருக்கின்றனர்.
எனவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும்  உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, அறிவிப்போடு இழுத்து மூடிவிடாமல்,  உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.
குறிப்பாக ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com