டிஜிட்டல்மயமாகிறது சட்டப்பேரவை மண்டபம்: 35 சதவீத காகிதங்களின் பயன்பாடு குறைப்பு

பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவை மண்டபமானது விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளது.
டிஜிட்டல்மயமாகிறது சட்டப்பேரவை மண்டபம்: 35 சதவீத காகிதங்களின் பயன்பாடு குறைப்பு


பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவை மண்டபமானது விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைச் செயலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை திட்டத்தால் 35 சதவீதம் அளவுக்கு காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை மிகவும் பழைமையான பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது. புனித ஜார்ஜ் கோட்டையின் ஒரு அங்கமாகத் திகழும் தமிழக சட்டப்பேரவைக்கென தனித்துவமான வரலாறு உள்ளது. இங்குள்ள பேரவை மண்டபத்தில் முதல் கூட்டம் 1921-ஆம் ஆண்டு ஜனவரி 9-இல் கூடியதாக பேரவை வரலாறு தெரிவிக்கிறது. இதன்பின்பு, சட்டப்பேரவை, சட்ட மேலவை ஆகியன உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் மேலவை கலைக்கப்பட்டது.

இந்த சட்டப்பேரவையானது 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் கட்டப்பட்ட பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்பின்பு, 2011-இல் அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டபத்திலேயே தொடர்ந்து நடந்து வருகிறது.

டிஜிட்டல்மயமாகிறது: மிகப் பழைமையான இந்த சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவைச் செயலாளர், பேரவை அதிகாரிகள், அரசுத் துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பார்வையாளர்கள் பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்காக பார்வையாளர் மாடங்களும் உள்ளன. புகழ்மிக்க இந்த சட்டப்பேரவை மண்டபத்தை நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல்மயப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் மத்திய அரசின் பேரவை மின் ஆளுமைத் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சமாக பேரவை மண்டபம் டிஜிட்டல்மயமாகிறது. அதன்படி, பேரவை மண்டபத்துக்குள் மிகப்பெரிய டிஜிட்டல் திரைகளுடன், உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக அவர்கள் பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரைகளும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை ஓரிரு மாதங்களில் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக  பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேரவை மண்டபத்தை டிஜிட்டல்மயமாக்கும் மிகப்பெரிய பணிக்கு முன்பாக, பேரவைச் செயலகத்தில் முழுவீச்சில் மின்ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து, பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

பேரவை உறுப்பினர்களுக்கு அச்சிட்டு அளிக்கப்படும் ஆவணங்களில் முக்கியமானவை உடுகுறியிடாத வினாக்கள் (எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட பதில்கள்), குழுக் கூட்ட அறிக்கைகள் போன்றவையாகும். அவைகள் இப்போது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, ஒரே ஆவணத்தை தனிச்சுற்றுக்கும், சம்பந்தப்பட்ட ஆவணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போதும் என தனித்தனியாக அளிக்காமல் ஒரு முறை மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேரவை அதிகாரிகள், அலுவலர்கள் காகிதங்களை அதிகம் பயன்படுத்தாமல் கணினி வழியிலேயே பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்களுக்கு அளிக்கப்படும் தகவல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பி வருவது, பேரவை ஊழியர்களிடம் செயல்படுத்தப்பட்டு வரும் மின்ஆளுமை போன்ற பணிகளால் காகிதங்களுக்கான பயன்பாடு 35 சதவீதம் வரை குறைந்துள்ளது. காகிதப் பயன்பாட்டை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காலத்துக்குள் முழுமையான மின்ஆளுமை நிறைந்த செயலகமாக சட்டப்பேரவைச் செயலகம் திகழும் என செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com