திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம்: அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல்

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் சென்னை திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் அமைய உள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் புதன்கிழமை
திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் அமைய உள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.
திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் அமைய உள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.


ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் சென்னை திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் அமைய உள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். 
சென்னை திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்நிலையில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசியது:
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.  இதனை  சென்னைத் துறைமுகம் நிர்வகித்து வருகிறது. தொடக்கத்தில் சுமார் 500 விசைப்படகுகளை நிறுத்தி வைக்கும் வசதிகள் கொண்டதாக கட்டமைக்கப்பட்ட இத்துறைமுகத்தை சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள்,  கண்ணாடி இழை படகுகள், நாட்டுப் படகுகள், மீன்பிடிக் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.  இதனால் காசிமேடு துறைமுகத்தில் தற்போது கடும் நெரிசல் நிலவி வருகிறது.
விசைப்படகுகளை கடலுக்குக் கொண்டு செல்ல தயார்படுத்துவதும், கடலிலிருந்து திரும்பியபிறகு மீண்டும் தளத்தை ஒட்டி நிலை நிறுத்துவதும் சவாலானதாக இருந்து வருவதாக மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.  இதனைக் கருத்தில் கொண்டு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. 
ரூ. 200 கோடியில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம்:  காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வரும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் திருவொற்றியூரில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது.  கடல் பகுதியில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவிலும்,  நிலப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலும் இத்துறைமுகம் அமைய உள்ளது.  ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளையொட்டி வடபுறம் 852 மீட்டர் நீளமும், தென்புறம் 1,088 மீட்டர் நீளமும் கொண்ட அலைத் தடுப்புச் சுவர்கள்  அமைக்கப்பட உள்ளன.  படகுத் துறையின் நீளம் சுமார்  300 மீட்டர் நீளத்திற்கு படகுத்துறை அமைக்கப்பட உள்ளது.
மேலும்  மீன் ஏலக் கூடம்,  மீனவர்களுக்கான வலை உலர்த்தும், பின்னும் கூடம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், பெட்ரோல் பங்க் என ஒரு துறைமுகத்துக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் 24 மாத கால இடைவெளியில் பணிகள் நிறைவடையும்.  இதனால் இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், சுமார் 25 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் ஜெயக்குமார். 
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வி. அலெக்ஸாண்டர்,  திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன், அதிமுக நிர்வாகிகள் கே.கிருஷ்ணன், மு.தனரமேஷ், சிவில் முருகேசன், அஜாக்ஸ் பரமசிவம், லயன் ஆர்.வீரக்குமார், பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com