சுடச்சுட

  

  ஆயுள் தண்டனை கைதியான முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவு

  By DIN  |   Published on : 13th September 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennai HighCourt


  கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 86 வயது முதியவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த அப்துல்மன்னன் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த 1990-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் எனது தந்தை பிலால் ஹாஜியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 86 வயதாகும் அவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை வழங்க அரசு மருத்துவமனையில் வசதி இல்லாத காரணத்தால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கடந்த ஜனவரி மாதம் அரசிடம் மனு அளித்தேன். 
  மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய மருத்துவர்கள் குழுவும் பரிந்துரை செய்திருந்தது. இதே போல சிறை நன்னடத்தை அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் என் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால், எனது தந்தை மீதான குற்றச்சாட்டு தீவிரமானது எனவும், அவர் வெளியே வந்தால் மதக்கலவரம் ஏற்படும் எனவும் கூறி சிறைத்துறை ஐஜி, எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என பரிந்துரைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக உள்துறைச் செயலாளர் எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து எனது தந்தையை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
  இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் அய்யப்பராஜ் வாதிட்டார். 
  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.பொன்ராஜ், மனுதாரரின் தந்தைக்கு 86 வயதாகிறது. சிறைத்துறை விதிகளின்படி தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறைத்துறை ஐஜி முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. சிறை நன்னடத்தை அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
  மேலும் மனுதாரரின் தந்தைக்கு  86 வயதாகி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து தமிழக உள்துறைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மனுதாரரின் தந்தையை 4 வாரங்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai