சுடச்சுட

  

  காப்பான் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

  By DIN  |   Published on : 13th September 2019 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kapan


  நடிகர்கள் மோகன்லால், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
  சென்னை உயர்நீதிமன்றத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில், நடிகர்கள் மோகன்லால், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் காப்பான். இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி பல கதைகளை எழுதியுள்ளேன். சரவெடி என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினேன். அந்த கதையை காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தேன். அவர் இந்த கதையை திரைப்படமாக்கும் போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அந்த வாய்ப்புக்காக நானும் காத்திருந்தேன்.
  ஆனால் என்னுடைய கதையான சரவெடியை இயக்குநர் கே.வி.ஆனந்த் காப்பான் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்தின் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. எனவே எனது அனுமதி இல்லாமல் என்னுடைய கதையை வேறொரு தலைப்பில் திரைப்படமாக எடுத்துள்ளார். எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 
  இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், மனுதாரரை காப்பான் திரைப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சந்திக்கவே இல்லை. மேலும் சரவெடி படத்தின் கதையும் காப்பான் திரைப்படத்தின் கதையும் வெவ்வேறானவை. எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
  இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai