சுடச்சுட

  

  காவிரியில் வெள்ளப்பெருக்கு: தண்ணீரில் மூழ்கிய வாழைகள்

  By DIN  |   Published on : 13th September 2019 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kaveri

  திருச்சியை அடுத்த திருவளர்ச்சோலை பகுதியில் வெள்ள நீரில் மூழ்கியுள்ள வாழைப் பயிர்கள்.


  காவிரியில் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீரால் திருச்சி, தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதி கிராமங்களில் பலநூறு ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை, கத்தரி செடிகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 
  கர்நாடகம் மற்றும் கேரளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக, கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உபரி நீர் முழுவதுமாக காவிரியில் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணை 43-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
  மேலும், மேட்டூரிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் கன அடி தண்ணீரில், திருச்சி முக்கொம்பு பகுதியிலிருந்து கொள்ளிடம், காவிரி என இருபகுதிகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.
  இங்கிருந்து காவிரியில் 33 ஆயிரம் கன அடி நீரும், மீதமுள்ள தண்ணீர் முழுவதுமாக கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரியில் பெருக்கெடுத்துள்ள வெள்ள நீரானது திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர் மற்றும் கல்லணைக்கு செல்லும் வழியோர கிராமங்களில் காவிரி, கொள்ளிடக்கரையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளது.
  இந்த கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்தரி செடிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வடிய அவகாசமின்றி இரண்டு நாள்களாக மழை பெய்வதுடன், காவிரியில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய வழியில்லை என வேதனையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.
  இதுதொடர்பாக, தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியது: திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள பெரும்பாலான வாழைப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக 6 லட்சம் வாழைகள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு ரூ.300 இழப்பீடாக வழங்க வேண்டும். 
  இதேபோல, கத்தரி மற்றும் இதர காய்கறி பயிர்கள் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கும் பாதிப்புக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். கடந்தமாத தொடக்கத்தில் தண்ணீரின்றி காய்ந்த பயிர்கள், இப்போது தண்ணீரால் அழுகும் நிலைக்கு வந்திருப்பதே வேதனைக்குரியது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் அவர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai