சுடச்சுட

  

  பள்ளிகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

  By DIN  |   Published on : 13th September 2019 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mosquto


  பருவமழை தொடங்கியுள்ளதால்  மாணவர்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 
  இது குறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:  தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் அரசு மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
  பள்ளிகளில் வகுப்பறைகளைச் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கியிருந்தால் உடனடியாக அதைத் தலைமையாசிரியருக்குத் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளிகளில் உள்ள குடிநீர்ப் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடிவைக்கப்பட வேண்டும்.  இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும். 
  நல்ல நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றது என்றும் அந்தக் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால்தான் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழலை ஏற்படுத்த வேண்டும். 
  சுகாதார தூதுவர்கள் மூலம் விழிப்புணர்வு:  பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமையாசிரியர்,  மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப்படை மாணவர்கள் சுகாதார தூதுவர்களாக பள்ளியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கும்,  தங்களது பெற்றோருக்கும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும்.   பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப்போதும் சுகாதாரமான குடிநீரையே மாணவர்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். 
  காய்ச்சல் ஏற்பட்டிருந்தால்... பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ ,  பள்ளிக்கு வந்த பின்னர் காய்ச்சல் ஏற்பட்டாலோ அதை ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அந்த மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து பின்னர் அந்த மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.  
  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இந்த அறிவுரைகளை அரசு,  அரசு  உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai