சுடச்சுட

  

  பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

  By DIN  |   Published on : 13th September 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  subhashree

  சென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23).  கனடா செல்வதற்காக பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். ரேடியல் சாலை பகுதியில் அவர் சென்றபோது சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து  சுபஸ்ரீ மீது விழுந்தது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.  சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. 

  இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கத்தில் உள்ள சண்முகா கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் வைத்தவர்கள் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai