சுடச்சுட

  

  பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்காலத் தடை

  By DIN  |   Published on : 13th September 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Highcourtmdu


  தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக செயல்படவும்,  நிர்வாகக் குழுவில் உள்ள 17 உறுப்பினர்கள் செயல்படவும் இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. 
  தேனியைச் சேர்ந்த அம்மாவாசை தாக்கல் செய்த மனு: நான் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளேன். 2018 செப்டம்பர் மாதம் மதுரை ஆவினுக்கு 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22 -ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தொடங்கப்பட்டது. அப்போது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் எவ்வித முன் அறிவிப்புமின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் 2 -ஆம் தேதி பதவியேற்றுள்ளனர். அதில் தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்படத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
  இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 17 உறுப்பினர்களின் நியமனம் தற்காலிகமானது தான். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இடைக்கால நிர்வாகக் குழுவில், தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் செயல்பட இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், இந்த மனு குறித்து பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர்,  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai