சுடச்சுட

  

  வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி: ராமதாஸ் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th September 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வீட்டுக் கூரைகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பை நிறுவுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
  இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
  இந்தியாவில் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 21.2 சதவீதம் அதாவது 74,082 மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி ஆகும். இதில் 11,758 மெகாவாட் அளவுக்கான மரபுசாரா மின்னுற்பத்திக்கான கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
  சூரிய ஒளி மின்சார உற்பத்தியை மிகவும் தாமதமாக தொடங்கிய தமிழகம், அதில் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டத்தின்படி 2023-ஆம் ஆண்டுக்குள் 5000 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இப்போதைய வேகம் போதாது. 
  தமிழகத்தில் திறந்தவெளிகளில் சூரியஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை உருவாக்குவது ஒருபுறமிருக்க, வீடுகளின் கூரைகள் மீதும் சூரியஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
   முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம், முதல்வரின் சூரிய ஒளி மேற்கூரை மூலதன ஊக்கத்தொகை திட்டம் ஆகியவற்றின் மூலம் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படுகிறது என்ற போதிலும் இது போதுமானது அல்ல.
  ஒரு வீட்டின் மேற்கூரையில் ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 யூனிட் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 1500 யூனிட் மின்சாரம்  உற்பத்தி செய்ய முடியும்.  ஆனால், இத்திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
  எனவே, தமிழகத்தில் வீடுகளின் கூரைகளில் சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு நிறுவப்படுவதை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதன் முதல்கட்டமாக வீட்டுக் கூரை சூரியஒளி மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.20,000 வீதம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai