துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் மதராசப் பட்டினம் எனும் 3 நாள் உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்து  முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகரம் 400 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான நகரம் மட்டுமல்ல, இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது என்பதும் பெருமைக்குரியதாகும். கிழக்கிந்திய கம்பெனி 1639- ஆம் ஆண்டு தமிழகத்தில் காலூன்றியபோது, அவர்களை முதலில் ஈர்த்த நகரம் மதராசப் பட்டினம்தான். அப்போது சென்னைப்பட்டினம் மற்றும் மதராசு பட்டினம் என்று இரண்டு கிராமங்கள் இருந்தன. இவை இரண்டும் இணைந்து உருவான நிலப்பரப்புதான் தற்போதைய சென்னை என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினத்திற்கு வருவதற்கு முன்பே, மதராசபட்டினத்தில் தமிழர்கள் வளமுடனும், செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இத்தகைய பாரம்பரியச் சிறப்புமிக்க, மதராசபட்டினத்தினை நினைவுகூறும் வகையில், “மதராசபட்டினம் விருந்து” என்ற பெயரில் இன்றையதினம் விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக அமைச்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

நோய்நொடியற்ற, உடல் வலிமையுள்ள, உழைக்கக்கூடிய மக்கள் சமுதாயம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். இரசாயணப் பொருட்கள் கலப்படமில்லாத உணவு தானியங்கள் மற்றும் பொருள்களால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான, சுகாதாரமான உணவுதான் மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது. நமது உடலில் சக்தி உருவாக, செல்கள் வளர்ச்சி பெற, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்பட இயற்கை உணவுகள், பூண்டு, வெங்காயம், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், ஆகியவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோயை உண்டாக்காத உணவும், அதேநேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும் மிகவும் அவசியம் ஆகும்.

மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்- என்றார் திருவள்ளுவர்.

முன் உண்ட உணவு செரித்த பின்னர், அதனை ஆராய்ந்து, பிறகு தக்க அளவு உணவு உண்டால், உடம்பிற்கு மருந்து என, ஒன்று வேண்டியதில்லை, என்பது இதன் பொருள் ஆகும். உணவை  மருந்துபோன்று குறைவாக, அளவாக உண்ண வேண்டும். அதிகம் உண்டால், எதிர்காலத்தில் மருந்தே உணவாகிவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இளைய சமுதாயத்தினர்தான், நமது நாட்டின் எதிர்காலத் தூண்கள். தற்போது ஏராளமான இளைஞர்களும், குழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. எவ்வித புரதச் சத்துக்களோ, வைட்டமின்களோ, கனிமச் சத்துக்களோ இல்லாத, உணவுகளாக துரித உணவுகள் உள்ளன. அவற்றில் உப்பும், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் உள்ளதால், அவற்றை உண்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உட்பட, பல்வேறு நோய்கள் வருகின்றன.

எனவே, துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணிக நோக்கத்தினை மட்டுமே மையமாகக் கொண்டு, மேலை நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள், செயற்கை குளிர்பானங்கள், அதிக எண்ணெய் உள்ள உணவுப்பொருள்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தினால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருள்களும், தவிர்க்கப்பட வேண்டும்.

2000-க்கும் மேற்பட்ட வியாதிகள், தற்போது சுகாதாரமற்ற உணவினால்தான், பரவுகின்றன என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், குறைவான எடையில் 20 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றும், உலகில், 39 சதவீதம் பேர் அதிக எடையுடன் இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மக்களுக்குத் தரமான உணவினை அளிக்க வேண்டிய கடமை, அரசுக்கும், உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வோருக்கும் உள்ளது. நுகர்வோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. 

மேலும் படிக்க:  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை... தலையணை அல்ல!

இவற்றைக் கருத்தில் கொண்டுதான், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பதை, உறுதி செய்யவும், உணவு பாதுகாப்பு, மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 மற்றும் அது தொடர்பான சட்டங்களை செயல்படுத்தவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 69 கோடி ரூபாய் செலவில், உணவு பாதுகாப்புத் துறை என்ற புதிய துறையை, 2011-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார்கள்.

உணவு வணிகர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர அனைத்து பொதுமக்களுக்கும், உணவு பாதுகாப்பு குறித்து, தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக இத்துறை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

மகாத்மா காந்திஜியின், 150-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட, “சுவஸ்த் பாரத் யாத்ரா” எனும், மிதிவண்டி தொடர் பேரணி பிரச்சாரம், தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு, மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்த, இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட, இந்தச் சைக்கிள் பேரணியில், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், குறைந்த உப்பு, குறைந்த சர்க்கரை, குறைந்த கொழுப்பு” என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு, பொதுமக்களுக்கு, சரியான உணவைத் தேர்வு செய்வது எப்படி என்ற முழு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் குழந்தைகள், மாணவர்கள், தேசிய மாணவர் படை, அரசு அலுவலர்கள், சுய உதவி குழுக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என, 97,250 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த சைக்கிள் பேரணியை சிறப்பாக நடத்தியதற்கான விருதினை, மத்திய அரசிடமிருந்து அதிமுக அரசு பெற்றது. மேலும், சிறந்த நடமாடும் உணவு ஆய்வகமாக தமிழ்நாட்டின் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கும் விருது வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்திய அரசின், உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையம், மற்றும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர்புர வாழ்வாதார குழுமமும் இணைந்து, உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராச பட்டிணம் விருந்து விழா, 13.09.2019 முதல் 15.09.2019 வரை மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார குழுமமும், சென்னை பெருநகர மாநகராட்சி, சாலையோர வியாபாரிகள் சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள், நுகர்வோர் அமைப்பு, சிவில் சங்கங்கள், அரசுசாரா நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தும், இந்த உணவுத் திருவிழாவில், உணவு கடைகள், வினாடி வினா, கலந்தாய்வு, செய்முறை விளக்கம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உணவு விழாவில் பொதுமக்களும், வணிகர்களும், நுகர்வோர்களும் திரளாக கலந்து கொண்டு, ரசித்து, ருசித்து பயன்பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு, உரையை நிறைவு செய்கிறேன் என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com