அனைத்து ஆறுகளிலும் காவிரி நீர் பாய்ந்தோட நடவடிக்கை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து ஆறுகளிலும் அடுத்த சில நாள்களில் காவிரி நீர் முழுமையாக வந்தடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார். 
அனைத்து ஆறுகளிலும் காவிரி நீர் பாய்ந்தோட நடவடிக்கை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து ஆறுகளிலும் அடுத்த சில நாள்களில் காவிரி நீர் முழுமையாக வந்தடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார். 
காரைக்காலுக்கு காவிரி நீர்வரத்து, பருவமழைக்கு முன்பாக செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு. அசனா மற்றும் புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், காவிரி நீரை காரைக்காலுக்கு முழுமையாக பெற எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பருவமழைக்கு முன்பாக சாலைகளை மேம்படுத்துதல், மழைநீர் தேங்காத வகையில் வடிகால்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: காரைக்காலுக்கு காவிரி நீர் தற்போது நூலாறு மூலம் வந்துகொண்டிருக்கிறது. அடுத்த ஓரிரு நாள்களில் திருமலைராஜனாற்றிலும், அடுத்தடுத்து பிற ஆறுகளிலும் காவிரி நீர் வரும் வகையில் பொதுப்பணித் துறை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
விவசாயிகள் பலரும் பாசன வடிகால்களை சீர்படுத்தவேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அடுத்த ஓரிரு நாள்களில் பொதுப்பணித் துறை நிர்வாகம், விவசாயிகள் கூறிய வாய்க்கால்களை தூர்வாரி சீர்படுத்த முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆலோசனையின்பேரில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிறுவன மற்றும் அரசு ஊழியர் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் 130 குளங்களை தூர்வாரி முடித்துள்ளது. இதன் மூலம் ஒரு டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்குப் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். துறைமுகம் மற்றும் பல தொழிற்சாலைகள் மூலம் ஏறக்குறைய 35 கி.மீட்டர் தூரத்துக்கான வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. விடுபட்ட வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித் துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காரைக்கால் பகுதியில் பரவலாக மாநில சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்திருக்கின்றன. இவற்றை நிரந்தரமாக சீர் செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுப்பணித் துறை உறுதியளித்துள்ளது. இந்த பணிகள் தாமதமாகும்பட்சத்தில் தற்காலிக சீரமைப்புகளை பருவமழைக்கு முன்பாக செய்துவிடுவதாக அந்த துறையினர் உறுதியளித்துள்ளனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவேண்டுமென கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அசனா வலியுறுத்தினார். தொழில்நுட்ப முறையில் அந்த பணிகளை விரைந்து நிறைவேற்ற பொதுப்பணித் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
கோட்டுச்சேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே  வாய்க்கால் பாலம் கட்டுமானம் முடிந்துவிட்டது. செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். காரைக்காலில் ஏரிகளை தூர்வாருவதற்கான அவகாசம் தற்போது இல்லை. காவிரி நீர் வந்துகொண்டிருக்கிறது, பருவமழையும் அடுத்து வந்துவிடும். எனவே, வருமாண்டு முற்பகுதியில் உரிய திட்டமிடலுடன் ஏரிகளை தூர்வார அரசு ஏற்பாடு செய்யும். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் உரிய முன்னேற்பாடுகளை தற்போதே செய்யத் தொடங்கியுள்ளது என்றார் அமைச்சர். 
கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன், நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சுரேஷ்,  செயற்பொறியாளர்கள் ஜி.பக்கிரிசாமி, எஸ்.பழனி, கூடுதல் வேளாண் இயக்குநர் (பொ) செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com