ஏற்றுமதியாளர்களுக்கு விரைவில் 90% காப்பீட்டு வசதியுடன் கடன் திட்டம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஏற்றுமதியாளர்களுக்காக விரைவில் 90 சதவீதம் காப்பீட்டு வசதியுடன் கூடிய கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தக வாரியத்தின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்.
மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தக வாரியத்தின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்.


ஏற்றுமதியாளர்களுக்காக விரைவில் 90 சதவீதம் காப்பீட்டு வசதியுடன் கூடிய கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
தில்லியில் வர்த்தக வாரியத்தின் இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில வர்த்தக, தொழில் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: 
கைவினைப்பொருள், சேலை, வாசனைத் திரவியங்கள், இனிப்புகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தனித்துவமிக்க சிறப்பையும், ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளையும் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டமும் கொண்டுள்ளன. இதனால், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக உருமாற்றும் தேவை உள்ளது. மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் இவற்றைக் கண்டறிந்து ஏற்றுமதி உத்திகளில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் அதிக கடன்களை வழங்கவும், சந்தையில் ஆதார வளங்களை அதிகரிக்கவும் முடியும். பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி விடுவிக்கப்படவுள்ளது. வங்கிகள் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி கடன் வழங்குவதன் மூலம், பெரு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், சிறு வர்த்தகம் ஆகியவை பயன்பெறும். மேலும், சில்லறைக் கடன் வாங்குவோர், ஏற்றுமதியாளர்களும் பயனடைவர். குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான (எம்எஸ்எம்இ )அனைத்து நிலுவை ஜிஎஸ்டி தொகையும் 30 நாள்களில் வழங்கப்படும்.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2018-19-இல் 537 பில்லியன் அமெரிக்க டாலரை (அரை டிரில்லியன் டாலர்) கடந்துள்ளது. சரக்குகள் ஏற்றுமதி 331 பில்லியன்அமெரிக்க டாலர் அளவுக்கும், சேவைகள் ஏற்றுமதி 205 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தன. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை எட்ட வேண்டியிருக்கும். இதற்காக நமது உள்நாட்டு உற்பத்தியையும், நமது போட்டித் தன்மையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
தொழில் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் எளிதாக்குவதை மேலும் மேம்படுத்துவது, போக்குவரத்துச் செலவைக் குறைப்பது, ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிதாக்குவது போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் செய்வதற்கான விதிமுறைகளை எளிதாக்குவதில் 2014-இல் 142-ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, 2018-இல் 77-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும், இதில் மாநிலங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்காக 90 சதவீதம் காப்பீட்டு வசதியுடன்கூடிய கடன் திட்டம் விரைவில் வர்த்தக அமைச்சகத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது, 60 சதவீதம் காப்பீட்டு வசதியுடன் கூடிய கடன் அளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி இல்லை. ஏற்றுமதிக்கான சாத்தியத்தை இந்தியா அதிகளவு கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால் அது நமக்குத் திருப்திகரமாக இல்லை. அமெரிக்காவுடன் 17 பில்லியன் டாலர் வர்த்தக உபரியையும், சீனாவுடன் 53 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையையும் கொண்டுள்ளோம். இதனால், வேளாண்மை, மருந்து தயாரிப்புகளுக்காக சந்தைத் தொடர்பை கண்டறிவதன் மூலம் நமது பலத்தை அதிகரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார் பியூஷ் கோயல். 
மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலர் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சலுகைகளை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் வலியுறுத்தல்
சிறப்புப் பொருளாதார மண்டல சலுகைகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோட்டார் வாகன உற்பத்தியில் பல்வேறு காரணிகளால் 25 சதவீதம் குறைந்துள்ளது. 
மாநில அளவில் மோட்டார் வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால், ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புச் சலுகைகளை மத்திய அரசு அளிக்கவும் கோரியுள்ளோம். ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. 
இதற்குப் போட்டியாக வியத்நாம், கம்போடியா, வங்கதேசம் போன்றவை உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொள்ள தங்கு தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை (எஃப்டிஏ) உடனடியாக நிறைவேற்றவும் கோரப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில், ஒரு பொருள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை பல பொருள் சிறப்புப் 
பொருளாதார மண்டலங்களாக மாற்ற வலியுறுத்தப்பட்டது. அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என தற்போதையை கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். 
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சலுகைகள் 2020, மார்ச்சில் முடிவுக்கு வருகின்றன. தமிழகத்தில் இந்த மண்டலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், இச்சலுகைகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
இந்தப் பயணம் வெற்றியும் பெற்றுள்ளது. இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான தலையங்கத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com