ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை: தமிழக ரேஷன் திட்டத்தில் எந்தப் பாதிப்பும் வராது: உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் தமிழக ரேஷன் திட்டத்தில் எந்தப் பாதிப்பும் வராது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். 
சென்னையில் வியாழக்கிழமை உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உணவு பொருள் மாவட்ட வழங்கல் அதிகாரிகள், 
சென்னையில் வியாழக்கிழமை உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற உணவு பொருள் மாவட்ட வழங்கல் அதிகாரிகள், 


ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் தமிழக ரேஷன் திட்டத்தில் எந்தப் பாதிப்பும் வராது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். 
தமிழகத்தில் உணவுப் பொருள் மாவட்ட வழங்கல் அதிகாரிகள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோருடன் சென்னையில் அவர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டி:
தமிழகத்தில் சாதாரண மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது என்பதற்கான ஆலோசனைகளை முதல்வர் பழனிசாமி வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில், தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இலக்கு வைத்து பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் இப்போது நடந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டமானது மாதம்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டமாகும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வழங்கல் அலுவலர்கள், தங்களது மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சீராக சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். வருங்காலத்திலும் அவை அப்படியே தொடர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம்.
கடந்த 3-ஆம் தேதி தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உணவுத் துறை அமைச்சர் தலைமையில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், பொது விநியோகத் துறையின் செயல்பாடுகள், உணவுத் துறை செயல்பாடுகளை கணினிமயமாக்குவது உள்ளிட்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த மேலாண்மை பொது விநியோகத் திட்டத்தைத்தான் ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
தமிழகத்துக்கான ஒதுக்கீட்டில் பாதிப்பு வராது: தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட மசோதா 2013-இல் கொண்டு வரப்பட்டது. மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென வலியுறுத்தினோம். திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் மசோதாவை ஏற்றுக் கொண்டோம். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் நமது திட்டத்தில் எந்தப் பாதிப்பும் இதுவரை இல்லை.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இப்போது புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து வரக் கூடிய தொழிலாளர்களும், மக்களும் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. நாம் அவர்களுக்கு வழங்கும் அரிசி அல்லது கோதுமை போன்ற உணவுப் பொருள்களை மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்வோம். எனவே, உணவுப் பொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றார் அமைச்சர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com