கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கீழடியில் 6 -ஆம் கட்ட அகழாய்வுக்கான இடங்களைத் தேர்வு செய்ய புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுப் பணி.
கீழடியில் 6 -ஆம் கட்ட அகழாய்வுக்கான இடங்களைத் தேர்வு செய்ய புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுப் பணி.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
 கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய 3 கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 5 பேர்களின் நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் கோப்பை, சூதுபவளம், எழுத்தாணி உள்பட 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் இரட்டை, வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகளும் கண்டெடுக்கப்பட்டன. 5-ஆம் கட்ட அகழாய்வு இம்மாத இறுதியில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழக தொல்லியல்துறை சார்பில் 6-ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 6-ஆம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோமேக்னடிசம் (ஐஐஜி) நிறுவனத்தைச் சேர்ந்த 3 தொல்லியல் ஆய்வாளர்கள் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் இந்தப் பணியை மேற்கொண்டனர். 
புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் பூமிக்கடியில் எந்தெந்த இடங்களில் தொல் பொருள்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாகக் கண்டறிய முடியும். 
இதன்மூலம் சரியான இடத்தை தேர்வு செய்து அகழாய்வை தொடங்க முடியும் என தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com