சிலை முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள கூடுதல் ஆணையரை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

முன் ஜாமீன் ரத்தான நிலையில் சிறை முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள கூடுதல் ஆணையரைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


முன் ஜாமீன் ரத்தான நிலையில் சிறை முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள கூடுதல் ஆணையரைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர். 
சென்னை, கபாலீசுவரர் கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு கோயில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்றபோது புன்னை வனநாதர் சந்நிதியில் மரகதத்தால் செய்யப்பட்ட மயில் சிலை மாற்றப்பட்டது. இச்சிலை, திருடப்பட்டு விற்கப்பட்டதாக ரங்கராஜ நரசிம்மன் அளித்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
இதுதொடர்பாக 2004 -ஆம் ஆண்டில் அக்கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த,  கூடுதல் ஆணையர் திருமகளை கடந்த 2018, டிசம்பர் 16-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, திருமகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த திருமகள், ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என வழக்கு விசாரணை நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது செப். 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது  ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு விசாரணை அலுவலர் ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் நிபந்தனை ஜாமீனின்போது திருமகள் இருமுறை கையெழுத்திட வரவில்லை.   எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். அன்றைய தினம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில், திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிபதி ரத்து செய்தார். 
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருமகளைக் கைது செய்ய சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள 4 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை, கும்கோணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முகாமிட்டு விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com