Enable Javscript for better performance
தமிழகம் வந்தது கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் வந்தது கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை

    By DIN  |   Published on : 14th September 2019 05:26 AM  |   அ+அ அ-   |    |  

    natarajar

    ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர்.


     ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை தில்லியிலிருந்து வெள்ளிக்கிழமை சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் சிலையைக் கொண்டு வந்தனர். இந்தச் சிலை கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள 700 ஆண்டுகள் பழைமையான குலசேகரமுடையார் கோயிலில் 75.7 செ.மீ. உயரமுள்ள பஞ்சலோக நடராஜர் சிலை இருந்தது. இந்த சிலை 1982-ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில், தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தில்  இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

    சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த சிலையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சிலை தமிழகத்தைச் சேர்ந்தது என்றும் இது குறித்து உரிய ஆவணங்களை தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏஜிஎஸ்ஏ  நிறுவனம் முடிவு செய்தது.  இதையடுத்து அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக நடராஜர் சிலை தில்லி கொண்டுவரப்பட்டது.

    உற்சாக வரவேற்பு:  அங்கிருந்து ரயில் மூலமாக சிலை  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தில்லியிலிருந்து சென்னைக்கு சிலையை கொண்டு வந்தனர்.  நடராஜர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

    நடராஜர் சிலை மீட்கப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்.  எங்கள் தரப்புக்காக வாதாடிய வழக்குரைஞர்களுக்கு நன்றி. தேவையான நேரத்தில் தேவையான செய்திகளை ஆன்மிகவாதிகளிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் குறை கூற விரும்பவில்லை.  சிலைகள் மீட்பு தொடர்பாக தமிழக அரசுக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டு விட்டன. தவறான தகவல்கள் அரசுக்கு சொல்லப்படுகின்றன.  யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக அரசுக்கும் தகவல் பரிமாற்றத்தில்தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

    அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள்...: நாம் கடவுளாக வணங்கும் சிலைகள் வெளிநாடுகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.  அமெரிக்காவில் மட்டும் 1000- க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.  அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க முடியும்.  எங்களைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  எனது சொந்த ஓய்வூதியத்தில் பணி செய்கிறேன். சிலையை விமானத்தில் கொண்டு வர, பணமில்லாத காரணத்தால் ரயிலில் சென்னைக்கு கொண்டு வந்தோம். 
    இந்தச் சிலையுடன் அழகிய கலைநயமிக்க தூண்களும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும் என்றார். 


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp