Enable Javscript for better performance
நதிநீர் இணைப்புத் திட்டங்களில் திமுக முன்னோடி: முதல்வருக்கு துரைமுருகன் பதில்- Dinamani

சுடச்சுட

    

    நதிநீர் இணைப்புத் திட்டங்களில் திமுக முன்னோடி: முதல்வருக்கு துரைமுருகன் பதில்

    By DIN  |   Published on : 14th September 2019 02:58 AM  |   அ+அ அ-   |    |  

    duraimurugan


    நதிநீர் இணைப்புத் திட்டங்களில் திமுகதான் முன்னோடி என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  விளக்கம் அளிக்கும் வகையில் 
    இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    நீர்மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
    1967 முதல் 2011 வரை 41- க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது திமுக ஆட்சிதான். நதிநீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். 
     தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் கருணாநிதி. காவிரி டெல்டா வரலாற்றில் முதன்முதலில் 378 தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட சாதனையும் திமுக ஆட்சி உருவாக்கியதுதான்.  2006 முதல் 2011 வரை ரூ.62,349 கோடி முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கியது திமுக அரசு.
    தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டன. இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் முதல்வர் பேசுகிறார்.
    இந்தியா முழுவதும்  பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பொருளாதாரப் பின்னடைவு எதுவும் இல்லை என்று முதல்வர் சொல்வதை  உண்மை என்று யாரும் ஏற்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
     

    kattana sevai