பேனர் கலாசாரத்தை ஊக்குவிப்பதா?:  அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவிப்பதாக  உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
பேனர் கலாசாரத்தை ஊக்குவிப்பதா?:  அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்


தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை அரசும் அதிகாரிகளும் ஊக்குவிப்பதாக  உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர்  கொண்ட அமர்வு பல்வேறு கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. 

அதன் விவரம்:   தமிழகத்தில் சட்ட விரோத பேனர்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் பேனர் கலாசாரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். குறிப்பாக அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் தங்கள் கடமை முடிந்து விடுவதாக தமிழக அரசு நினைத்துக் கொள்கிறது. சட்டவிரோத பேனர் விவகாரத்தில் ஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த பதில்மனுவில், சட்ட விரோத பேனர்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது ஓர் உயிர் பலியாகி விட்டது. அந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதற்கு யார் பொறுப்பு ஏற்பது, குடிமக்களின் உயிர் அவ்வளவு சாதாரணமாகி விட்டதா, மனித உயிர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை அவ்வளவு தானா, கோவையில் இதே போல ஒரு சம்பவம் நடந்த போது கூட உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது, அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் ஏற்று நடத்த முடியாது. சட்டவிரோதமாக யாரும் பேனர் வைக்கக்கூடாது என தமிழக முதல்வர் ஏன் அறிவுறுத்தக்கூடாது, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா, பேனர் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாதா என கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டன, விபத்து நடந்து 3 மணி நேரத்துக்குப் பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நீதிமன்றம் அறிவுறுத்தல் கட்சிகள் நடவடிக்கை: பேனர் வழக்கு விசாரணையின் போதே அதிமுக, திமுக, பாமக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என தங்களது கட்சியினரை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டன. இதுதொடர்பாக பிற்பகலில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. 
இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.  தமிழகத்தில் திருமணம், திருவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, கிடா வெட்டு என அனைத்துக்கும் பேனர் வைக்கப்படுவதாகவும், விவாகரத்துக்கு மட்டுமே இன்னும் பேனர் வைக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தனர். 
 இந்த வழக்கு விசாரணையின் இடைவெளியின் போது அரசு தலைமை  வழக்குரைஞர் விஜய் நாராயணனை,  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com