‘பகவான்’ கிருஷ்ணரை விமர்சித்ததாக கி.வீரமணி மீது வழக்குப்பதிவு: திரும்பப் பெற இ.கம்யூ கோரிக்கை 

‘பகவான்’ கிருஷ்ணரை விமர்சித்ததாக கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற இ.கம்யூ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

சென்னை: ‘பகவான்’ கிருஷ்ணரை விமர்சித்ததாக கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற இ.கம்யூ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திராவிடர் கழகத் தலைவர் திருமிகு கி.வீரமணி மீது ‘பகவான்’ கிருஷ்ணர் பற்றி அவதூறு பேசியதாக, 6 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. நெல்லை நீதித்துறை நடுவர் மன்றம் 4-ல், சிரி ராதா தாமோதர் வழிபாட்டு மையத்தின் தலைவர் திரு சிதாபதி என்பவர், பகவான் கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி பேசியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதற்கு காரணமான கி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என  தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் மனுதாரரின் (சிதாபதி) முறையீட்டில் உண்மையிருந்தால் அவர் (கி.வீரமணி) மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தச்சநல்லூர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் காவல் துறை கி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திராவிடர் கழகம் பகுத்தறிவுப் பரப்புரை செய்து வருவதை அனைவரும் அறிவர். மூடப் பழக்க வழக்கங்கள் மண்டிக்கிடப்பதற்கு புராணக் கற்பனைக் கதைகளே காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்தோடு பரப்புரை செய்து வருகின்றனர். கிருஷ்ணனின் லீலைகள் குறித்து பல தகவல்கள் உள்ளன. அவர் வீடுவீடாக வெண்ணெய் திருடி தின்பார் என்றும், ஆறுகளில் குளிக்கச் செல்லும் இளம் பெண்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்களை கிண்டல் செய்து, ஏளனப்படுத்தி, ஆபாசமாக அவமதித்து, அதில் ஆனந்தம் கொள்வார் என்றும் பல கதைகள் உள்ளன.இது போன்ற கற்பனைக் கதைகளை சிருங்காரரசம் சொட்ட, பக்தர்கள் பரப்புரை செய்யும் போது இளைய தலைமுறையினர் சீரழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனை விமர்சன ரீதியாக எடுத்துக் கூற அரசியல் அமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியுள்ளது.

இந்த விபரங்களை தச்சநல்லூர் காவல்துறை  கருத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? கருத்துரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலுக்கு பகவான் கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது. கருத்துரிமை பறிப்படுவதை ஜனநாயக சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு, நெல்லை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு உரிய விளக்கம் அளித்து, திராவிடர் கழக தலைவர் திருமிகு கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com