நம்மை ஒற்றுமைப்படுத்தும் அந்த ஐந்து சொற்கள்: மதிமுக மாநாட்டில் ஸ்டாலின் நெகிழ்ச்சி 

நம்மை ஒற்றுமைப்படுத்தும் அந்த ஐந்து சொற்கள் என்று மதிமுக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மதிமுக மாநாட்டில் வைகோவும், ஸ்டாலினும்
மதிமுக மாநாட்டில் வைகோவும், ஸ்டாலினும்

சென்னை: நம்மை ஒற்றுமைப்படுத்தும் அந்த ஐந்து சொற்கள் என்று மதிமுக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஞாயிறன்று (15-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , மதிமுக சார்பில் நடைபெற்ற, பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசியதாவது:

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அதையொட்டி நடைபெறக்கூடிய இந்த மாநாட்டில் பங்கேற்று இந்த மாநாட்டைத் துவக்கிவைப்பதிலே நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர் அண்ணா அவர்கள்தான் நம் முகம், நம் முகவரி. அதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நானும் அண்ணன் வைகோ அவர்களும் எத்தனையோ மேடைகளில் ஒன்றாக கலந்துக் கொண்டிருந்தாலும், இந்த மேடையில் ஒன்றாக இருப்பதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், நான் பங்கேற்கக்கூடிய ம.தி.மு.க.,வினுடைய முதல் மாநாடு - இந்த மாநாடு!

பொதுமேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். தி.மு.க மேடைகளில் கலந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறோம். ஆனால், ம.தி.மு.க.,வின் மாநாடு என்பது இதுதான். அதனால்தான் சொன்னேன், என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடாக இது அமைந்திருக்கிறது. நீர் அடித்து நீர் விலகாது என்பதைப்போல் நாம் ஒன்றாக ஆகியிருக்கிறோம். தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் ஒருதாய் மக்கள். அந்தத் தாய்தான் காஞ்சி தந்த வள்ளுவன், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். பிரிந்துகிடக்கக்கூடிய தமிழர்களை இணைக்கக்கூடிய வலிமை சில சொற்களுக்குத்தான் உண்டு. அத்தகைய சொற்களில் ஒன்று 'தமிழன்'. அத்தகைய சொற்களில் ஒன்று 'திராவிடம்'! அத்தகைய சொற்களில் ஒன்று தந்தை பெரியார்! அத்தகைய சொற்களில் ஒன்று அறிஞர் அண்ணா! அத்தகைய சொற்களில் ஒன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

நாம் வேறு வேறு இயக்கங்களாகப் பிரிந்திருந்தாலும், கொள்கையில் ஒன்றாக நிற்கிறோம்; நிற்போம். நம்மை ஒற்றுமைப்படுத்துவதே இந்தச் சொற்கள்தான். எதை விட்டுக்கொடுத்தாலும் இந்த ஐந்தையும் ஒருக்காலும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால்தான் ம.தி.மு.க. மேடையில் ஸ்டாலின் நின்றுக் கொண்டிருக்கிறான். தி.மு.க. மேடையில் அண்ணன் வைகோ நிற்கிறார். இது ஒருசிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஏன் ஒருசிலருக்கு கோபம் வரலாம். ஒருசிலருக்கு ஆத்திரம் வரலாம். பொறாமையாகக்கூட இருக்கலாம். திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் எப்படி நிரந்தர தளபதியோ - அதுபோல் அண்ணன் வைகோ அவர்கள் நிரந்தரப் போர்வாள். இதுதான் கலைஞருடைய கனவு. இதுதான் அறிஞர் அண்ணாவுடைய கனவு.

ஜனநாயக அமைப்புகள் எல்லாம் இன்றைக்கு கேலிக்கூத்தாக்கப் படுகின்றது. இவைகள் எல்லாம் தமிழகத்திற்கான பிரச்சனைகள் மட்டுமல்ல, இந்திய அளவில் இருக்கும் பிரச்சனைகள். எனவே இதனை எதிர்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது!

ரயில்வே துறையாக இருந்தாலும் அஞ்சல் துறையாக இருந்தாலும் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் போராடி போராடிதான் நாம் உரிமையை பெற வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறோம். நாம் லேசாக கண் அயர்ந்தால் இந்தியைத் திணித்து விடுவார்கள். கொஞ்சம் அசந்து விட்டால் தமிழையே புறக்கணித்து விடுவார்கள்.

இதனை மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறன. இவற்றைத் தடுக்க வேண்டிய ஜனநாயக கடமை நமக்கு இருக்கிறது!

அதற்கு அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த மாநாடு பயன்பட வேண்டும் என்று நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com