கடைமடைப் பகுதி வரை காவிரி நீர் சென்றது ஏன் தெரியவில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்

கடைமடைப் பகுதி வரை காவிரி நீர் சென்றது ஏன் தெரியவில்லை: அமைச்சர் டி.ஜெயக்குமார்

கால்வாய்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் தமிழக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதி வரை சென்றிருக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

கால்வாய்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் தமிழக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதி வரை சென்றிருக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

நீர் மேலாண்மை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் தமிழக அரசை குறை கூறியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து, அமைச்சர் டி.ஜெயக்குமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

திமுக ஆட்சிக் காலத்தில்தான் காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமைகள் தாரைவார்க்கப்பட்டன. காவிரியின் உப நதிகளான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணாவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்தபோது மெளனம் காத்தது திமுக தான். அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் சட்டப் போராட்டத்தால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டன.

இதனால் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீர் கிடைத்து, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கூட, அதன் முழு நீர் மட்டமான 152 அடி வரையில் நீரை தேக்கி வைப்பதற்கு திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

தற்போது நீர் மேலாண்மை குறித்து பேசுவதற்கு அவர்களுக்குத் தகுதி ஏதுமில்லை. முதற்கட்டமாக அணையின்  நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆணை பெறப்பட்டது, வரலாற்றுச் சாதனை ஆகும். இதற்கு அதிமுக அரசின் தொடர் முயற்சியே காரணம்.

மேலும் இந்த அணையின் நீர்மட்டத்தை அதன் முழு நீர் மட்ட அளவான 152 அடி வரையில் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

இதுமட்டுமின்றி ஏராளமான புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். முக்கியமாக, நீர்நிலை ஆதாரங்களை, பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் குடிமராமத்து திட்டம் 2016-2017 -ஆம் ஆண்டுகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1,513 பணிகளும், 2017-2018-ஆம் ஆண்டுகளில் ரூ.329 கோடி மதிப்பீட்டில் 1,511 பணிகளும் செய்து முடிக்கப்பட்டன. இந்த நிதியாண்டில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,829 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன. 

மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி ரூ.61 கோடி  செலவில் மேற்கொள்ளப்பட்டு கடைமடைப்பகுதி வரை காவிரி நீர் சென்றடைந்த விவரம் பத்திரிகைகளில் வந்ததை துரைமுருகன் ஏன் கவனிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com