தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேனர்கள் அகற்றம்: விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேனர்கள் அகற்றம்: விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரி மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. 
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்அவுட்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினரும், காவல் துறையினரும் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்அவுட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பேனர்கள், கட்-அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக பேனர்களை வைத்தது தொடர்பாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தடை மீறலும்...தண்டனையும்: பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-இல் தீர்ப்புக் கூறப்பட்டது. அதில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மீறப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள், கட்-அவுட்களை  வைப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு பேனருக்கு ரூ.5 ஆயிரம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.  அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியின்றி அச்சடிக்கும் அச்சக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடி சீல் வைக்கப்படும்.
வழக்குப் பதிவுக்குப் பிறகு... சட்ட விரோத பேனர்கள் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்வர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பிணையில் வெளி வரக்கூடிய சட்டப் பிரிவுகள், பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் சட்ட விரோத பேனர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படும். பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தை அணுகி பிணையைப் பெற்றுக் கொள்வர். வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்படி ஓராண்டுச் சிறை, அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com