பிளஸ் 1 காலாண்டுத் தேர்வு வினாத்தாள்  வெளியானதாக தகவல்: முதன்மைக் கல்வி அலுவலர் மறுப்பு

கோவை மாவட்டத்தில் 11 -ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக  பரவிய தகவல் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் 11 -ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக  பரவிய தகவல் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை முதன்மைக் கல்வி அலுவலர் மறுத்துள்ளார்.
 தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத் தேர்வு எழுதக் கூடிய 10, 11, 12 -ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு கடந்த 12 -ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தேர்வுகள் வரும் 23 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஷேர் ஷாட் எனப்படும் செல்லிடப்பேசி செயலியில் 11 -ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியானதாகத் தகவல் பரவியது. 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இந்த வினாத்தாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்த செயலியில் பதிவிடப்பட்டதாகவும், அதேபோல செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கணிப்பொறி பயன்பாட்டியல் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாகவும் தகவல் பரவியது. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் இந்தத் தகவல் காட்டுத் தீ போல பரவியது.
 இதுகுறித்து கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகனிடம் கேட்டபோது, 11 -ஆம் வகுப்பு வினாத் தாள்கள் செல்லிடப்பேசி செயலியில் முன்கூட்டியே வெளியானதாக எங்களுக்கும் தகவல் கிடைத்தது. ஆனால், அந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் இருந்துதான் பரவியதா என்பது உறுதி செய்யப்படவில்லை. குறிப்பிட்ட அந்த செயலியில் எந்த மாவட்டத்தில் இருப்பவர்களும் தகவலைப் பதிவிட முடியும் என்பதால் கோவையில் இருந்துதான் பதிவிடப்பட்டது என்று கூற முடியாது.  கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கும், அதிகாரிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் கோவையில் இருந்து வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக தகவல் பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது.
கோவை மாவட்டத்தைப் பொருத்த வரையிலும் வினாத்தாள்கள் மிகுந்த பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. தேர்வு நாளன்று மட்டுமே அவை கட்டுக்காப்பு மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com