ஹிந்தி திணிப்பு: அமித் ஷா தமிழகம் வரும்போது கருப்புக்கொடி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

நாட்டின் அடையாளமாக ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என்று  காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்
ஹிந்தி திணிப்பு: அமித் ஷா தமிழகம் வரும்போது கருப்புக்கொடி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு


நாட்டின் அடையாளமாக ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டப்படும் என்று  காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் நிறைவு விழாவை அக்டோபர் 2 முதல் 9-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடுவதுடன், அந்த நாள்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாத யாத்திரை நடைபெறும்.
 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரையும் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் மாநில பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி கோவையில் நடைபெறும். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், அக்டோபர் 15 முதல் 25-ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நாட்டின் அடையாளமாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு அவர் வரும்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நான்குனேரியில் காங்கிரஸ்: கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசும்போது, நான்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். இந்தத் தொகுதியைத் திமுகவிடம் இருந்து கேட்டுப் பெற வேண்டும் என்று பேசினார்.
இன்று ஆர்ப்பாட்டம்: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:
நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதன்கிழமை (செப்.18) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம்:  காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இளைஞரணி சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com