
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (செப். 20) முதல் நீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக வரும் வெள்ளிக்கிழமை (செப். 20) முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 1,944 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 10 பழைய ராஜவாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் பாசனம் பெறும் புதிய பாசனப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை 1,711 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் என மொத்தம் 6 ஆயிரத்து 765 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.