
குரோம்பேட்டையில் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே குரோம்பேட்டை ஹஸ்தீனபுரத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனு: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் எனது மகன் யோகேஸ்வரனை சந்தேகத்தின் அடிப்படையில், குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் விசாரணைக்காக அழைத்துச் சென்றார். காவல் நிலையத்தில் வைத்து எனது மகனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் 18 வயது பூர்த்தியடையாதவர் என்று தெரிந்தும் கடுமையாகத் தாக்கி உள்ளார். சிறுவன் என்பது தெரிந்தும் எனது மகன் மீது தாக்குதல் நடத்தியது அடிப்படை மனித உரிமை மீறலாகும். எனவே காவல் ஆய்வாளர் சிவகுமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், சிவகுமாருக்கு ரூ. 50 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.