ஆள்மாறாட்டம் எதிரொலி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க அறிவுறுத்தல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் வந்ததன் எதிரொலியாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்க
ஆள்மாறாட்டம் எதிரொலி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க அறிவுறுத்தல்


சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் வந்ததன் எதிரொலியாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களும் பரிசோதனை செய்யுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நாராயண பாபு கூறியுள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

புகார் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் நேற்று அளித்த விளக்கத்தில், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழாண்டில் எம்பிபிஎஸ் இடங்களில் சேர்ந்த மாணவர்கள் அனைவரது விவரங்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்குமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் போவதாகவும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவ,ர் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வினை தொடர்ந்து எழுதினார். நிகழாண்டு நடைபெற்ற  தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்று அவர் தேர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கலந்தாய்வில் தேனி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்து அங்கு அவர் சேர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் புகார் ஒன்று வந்தது. உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவரது நீட் தேர்வு நுழைவுச் சீட்டிலும், கலந்தாய்வு மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்திலும் வேறு வேறு புகைப்படங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் 4 பேர் கொண்ட பேராசிரியர் குழுவை அமைத்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார். அந்த விசாரணையில், அந்த மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி சார்பில் அந்த மாணவருக்கு எதிராக தேனியில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயண பாபு மற்றும் தேர்வுக் குழுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

உதித் சூர்யா என்ற மாணவர், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான சில விவரங்கள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாகவே, அந்த மாணவருக்கு எதிராக காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவரையும், அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர்கள் உத்தரவாதமளித்தனர். அதன் பின்னர், அந்த மாணவர் கல்லூரிக்கு வருவதில்லை. தற்போது மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களது விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்குமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு முதல் ரேகைப் பதிவு 
முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் கைரேகைப் பதிவுகளைப் பெற முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வெளிப்படைத்தன்மையுடன், எந்த முறைகேடுகளும் இன்றி கலந்தாய்வை நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. அதனை மேலும் கடுமையாக்கும் விதமாக அடுத்த ஆண்டு முதல் கைரேகைப் பதிவை அடிப்படை ஆவணமாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

விண்ணப்பப் பதிவில் இருந்து கலந்தாய்வு மற்றும் கல்லூரியில் சேருவது வரை கைரேகைப் பதிவு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com