அக்டோபர் 2 முதல் நெகிழிக்குத் தடை: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு (பிளாஸ்டிக்) வரும் 2-ஆம் தேதி முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 2 முதல் நெகிழிக்குத் தடை: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்


ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகளுக்கு (பிளாஸ்டிக்) வரும் 2-ஆம் தேதி முதல் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தீவிரப்படுத்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். 
காணொலிக் காட்சி: அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப்  பொருள்களுக்கு, தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசுத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக மத்திய அரசுத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, ஏற்கெனவே தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கான தடை குறித்து விரிவாக தலைமைச் செயலாளர் எடுத்துரைத்துள்ளார். இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுத்து மாற்றுப் பொருள்கள் உபயோகப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்க வேண்டுமென ஆட்சியர்களை தனது கடிதத்தின் வாயிலாக தலைமைச் செயலாளர் க.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களை தவிர்ப்பதற்கான செயல் திட்டத்தையும் அவர் ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதில், நெகிழிப் பயன்பாட்டை படிப்படியாக தவிர்ப்பது, மாற்றுப் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com