நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தார்மிகப் பொறுப்பு : டாக்டர் சுதா சேஷய்யன் அறிவுறுத்தல்

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் என
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதிமொழி கூறி கையொப்பமிடும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நோயாளிகள் பாதுகாப்பு தின உறுதிமொழி கூறி கையொப்பமிடும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.


சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் என அனைவருக்கும் தார்மிகப் பொறுப்பு உள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கீரிக்கப்பட்ட மருத்துவ சேவை நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் (சிஏஹெச்ஓ) இணைச் செயலர் டாக்டர் அனுராதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நோயாளிகள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். 
நோயாளிகளை அணுகும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். கைகளை முறையாக கழுவுவது எப்படி?,  ஆய்வகத்தில் நோயாளிகளிடம் பாதுகாப்பாக மாதிரிகளை எவ்வாறு சேகரிப்பது?, எத்தகைய பாதுகாப்புக் கவசங்களை  சிகிச்சையளிப்பவர்கள் அணிந்திருக்க வேண்டும் என்பன தொடர்பான செயல்முறை விளக்கங்கள் அப்போது அளிக்கப்பட்டன.
முன்னதாக, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
பொதுவாக மருத்துவம் சார்ந்த கல்வியை நிறைவு செய்துவிட்டு சேவையாற்ற வருபவர்கள் அதுதொடர்பான உறுதிமொழி ஒன்றை ஏற்க வேண்டும் என்பது மரபு. அந்த உறுதிமொழியின் மூல வடிவத்தில் லத்தீன் மொழியில் சில வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதாவது, மருத்துவ சேவையில், ஒரு நோயாளிக்கு நன்மை செய்ய நம்மால் முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால்,  ஒருபோதும் எவருக்கும் தீங்கு இழைத்துவிடக் கூடாது, என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த வாசகங்கள் இருக்கும்.
மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தங்களது தாரக மந்திரமாக அந்த வாசகத்தைத்தான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய பரபரப்பான உலகில் நோயாளிகள் அதிகரித்து விட்டனர். மருத்துவமனைகளும், ஆய்வகங்களும் அதிகரித்துவிட்டன. ஆனால், நோயாளிகளின் பாதுகாப்பு அங்கு உறுதி செய்யப்படுகிறதா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
இதய நோய்கள் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் உலக அளவில் அதிமாக உள்ளது. இரண்டாவதாக புற்றுநோய் இறப்பு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மருத்துவ இடங்களில் பாதுகாப்பு இல்லாததால் நேரிடும் இறப்புகள்தான் அதிகமாக உள்ளன. 
பாதுகாப்பான முறையில் ஊசி செலுத்துவதும், கைகளை முறையாக கழுவிய பிறகு நோயாளிகளைத் தொடுவதும், நம்மிடம் இருந்து எந்த நோய்த் தொற்றும் நோயாளிகளுக்கு பரவாதவாறு பாதுகாப்பாக இருப்பதும் அவசியம். அதேபோன்று, நோயாளியின் உடல் நிலையை முழுமையாக அறிந்த பிறகே சிகிச்சை அளிப்பதும், அவர்களது மருத்துவ ஆவணங்களை முறையாக கையாளுவதும் அதிமுக்கியம். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் மூலமாக நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com