பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் 5-ஆக குறைப்பு: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்

 தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  
கோப்புப் படம்
கோப்புப் படம்


 தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  
அதன்படி இந்த வகுப்புகளுக்கு  6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:  
மாநிலப் பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கை மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து பிளஸ் 1,  பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் அச்சத்தைப் போக்கும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையிலும் தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையில் உள்ள 4 பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக மூன்று பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளித்து கீழ் கண்டவாறு ஆணையிடுகிறது. 
இரண்டும் நடைமுறையில்...: மாணவர்கள் பகுதி- 1 மொழிப்பாடம் மற்றும் பகுதி 2 ஆங்கிலம் தவிர,  பகுதி 3-இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள இந்த அரசாணையில் பிற்சேர்க்கை 2-இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தேர்வு செய்து கொள்ளலாம். 
மாணவர்கள் தெரிவு செய்யும் பாடத் தொகுப்பில் உள்ள பகுதி 1- மொழிப்பாடம்,  பகுதி-2 ஆங்கிலம் உள்பட பகுதி 3-இல் உள்ள அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.  புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அதில் கூறியுள்ளார். 
மருத்துவம்- பொறியியல் படிப்பதற்காக...: புதிய அரசாணையின்படி 6 பாடங்கள், 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளன. பிளஸ் 1 வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 6 பாடங்கள் இடம் பெறுகின்றன. 
மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன. 
அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 6 பாடங்கள் உள்ளன. இந்தப் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். தற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட இருக்கிறது. அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்தப் பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதே போன்று பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். வணிகவியல் பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என ஐந்து படங்கள் மட்டும் இருக்கும். கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால் , தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப் பதிவியல் தணிக்கையியல் கணினி தொழில்நுட்பம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன. 
இதில், கணினி தொழில்நுட்பம் பாடம் நீக்கப்பட்டு 5 பாடங்கள் மட்டும் இடம்பெற உள்ளன. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, தலா 100 மதிப்பெண்கள் என, 500 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. 
மருத்துவம் படிக்க இருக்கும் மாணவர்களுக்கு கணிதம் பெரும் சுமையாக இருந்து வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பு, மேல்நிலை வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com