வேலைவாய்ப்பில் பின்தங்கியோருக்கு ரூ.100 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பில் பின்தங்கியோருக்கு ரூ.100 கோடியில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 
வேலைவாய்ப்பில் பின்தங்கியோருக்கு ரூ.100 கோடியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: தமிழக அரசு உத்தரவு


வேலைவாய்ப்பில் பின்தங்கியோருக்கு ரூ.100 கோடியில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

அந்த உத்தரவின் விவரம்:
படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் முனைவதற்கான குறுகிய கால திறன் பயிற்சி ரூ.100 கோடி செலவில் அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டது. 

அந்தப் பரிந்துரைகளின் விவரம்:-
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மக்கள் 19 சதவீதம் பேர் உள்ளனர். இதேபோன்று, சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 13 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளாக 1.68 சதவீதம் பேரும் இருக்கின்றனர். அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக குறுகிய கால திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட 50 ஆயிரம் பேருக்கு குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தப் பயிற்சிகளானது சந்தையில் வேலைவாய்ப்பைத் தேடித் தரும் வகையிலான பயிற்சிகளாக இருக்கும் என பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி நிதி: 50 ஆயிரம் பேருக்கு குறுகிய கால தொழில் பயிற்சிகள் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. 
அதேசமயம், இந்தத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.200 கோடியை ஒதுக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கோரிக்கையை ஆழ்ந்து பரிசீலித்த தமிழக அரசு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ள ரூ.200 கோடியில் இருந்து ரூ.100 கோடி நிதியானது 50 ஆயிரம் பேருக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கும் திட்டத்துக்காக ஒதுக்கப்படும்.
இந்த நிதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பொது வைப்பீட்டு கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com