தீபாவளி பண்டிகை: 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 
 சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
 சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.


தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 
தீபாவளி பண்டிகையை ஒட்டி, போக்குவரத்துத் துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை ஒட்டி, அக்டோபர் 24 முதல் 26-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த இடங்களில் இருந்து தினமும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் ஏற்கெனவே இயக்கப்படுகின்றன. அத்துடன் கூடுதலாக 4 ஆயிரத்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மூன்று நாள்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து மூன்று நாள்களுக்கு 8 ஆயிரத்து 310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திரும்பி வருவதற்கு...: தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சிறப்பாகக் கொண்டாடி விட்டு சென்னைக்குத் திரும்ப 4 நாள்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அக்டோபர் 27 முதல் 30-ஆம் தேதி வரை 4 ஆயிரத்து 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 921 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு எவ்வளவு: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 480 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்யலாம்!
தீபாவளி பண்டிக்கைக்கான முன்பதிவை, பயணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in ஆகியவற்றுடன் தனியார் இணையதளங்கள் வழியாகவும் மேற்கொள்ளலாம். அதன்படி,  www.redbus.in, www.paytm.com, www.busindia.com  போன்ற இணையதளங்களின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, 2 லட்சத்து 4 ஆயிரத்து 115 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இப்போது 33 ஆயிரத்து 984 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com