ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால், இளைஞர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால் போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்காவிட்டால், இளைஞர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்துக்குரியது.
மத்தியில் பாஜக அரசும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்த பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. 
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐ.சி.எப். ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,765 பேரில் 1,600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். 
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து,  தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.
அதிமுக அரசும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வட மாநில இளைஞர்களை பொறியாளர்களாக தேர்வு செய்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வுகளை வட மாநிலத்தவர் எழுதலாம் எனக் கூறி, இப்போது 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கு நடைபெறப் போகும் தேர்விலும் வட மாநில இளைஞர்கள் தேர்வு எழுதலாம் என்று சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு  காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களையெல்லாம் வட மாநிலத்தவருக்கு வாரி வழங்குவதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
 மத்திய - மாநில அரசுகள் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால், இளைஞர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com